தற்கொலைக்கு முதல் நடந்தவை! – சஹ்ரானின் மனைவி கூறிய திடுக்கும் தகவல்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரிகள் குழு கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள கடைத்தொகுதி ஒன்றில் ஐந்தாம் மாடியிலுள்ள அறையொன்றில் தங்களது தலைவர் சஹ்ரான் காசீம் முன்னிலையில் சத்தியப்பிரமாணத்தை செய்து கொண்டதாக தங்களுக்குக் கிடைக்கும் தகவல்கள் தெரிவிப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

தற்கொலைக் குண்டுதாரிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இருமாத காலத்திற்கு  ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா வாடகைக்கு தொடர்மாடிக் கட்டடத்தொகுதி ஒன்றில் மூன்று படுக்கையறைகளைக் கொண்ட வீடொன்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஈஸ்டர் ஞாயிறு தினத்திற்கு முதல்நாளே ஈஸ்டர் குண்டுதாரிகள் சத்தியப்பிரமாணம் செய்ததாகத் தெரியவருகிறது.

சாய்ந்தமருதில் வீடொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பின் போது காயமடைந்த சஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா சாதியா (வயது 24) பொலிஸாரின் விசாரணைகளின் போது இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார்.

தான் புனித போருக்குச் செல்லப்போவதாக கொள்ளுப்பிட்டியிலுள்ள கட்டடத்தில் ஏப்ரல் 18 ஆம் திகதி இரவுணவு அருந்திய பின்னர் சஹ்ரான் தனது மனைவியிடம் கூறியிருக்கிறார். தான் மரணமடைந்த பிறகு 4 மாதங்களுக்கு துக்கம் அனுஷ்டிக்குமாறும் அவர் மனைவியைக் கேட்டிருந்தார்.

ஆனால் தன்னை ஆரம்மலவின் கெக்குனகொல்ல பிரதேசத்திலுள்ள தனது பெற்றோரின் வீட்டிற்கு அனுப்புமாறு சஹ்ரானின் மனைவி கேட்டிருக்கிறார். எனினும் சஹ்ரான் அதற்குப்  பதிலளிக்கவில்லை. தன்னை விவாகரத்துச் செய்யுமாறு கூட சஹ்ரானை சாதியா பல தடவைகள் கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு அவர் இணங்கவில்லை.

ஈஸ்டர் ஞாயிறன்று தாங்கள் சாய்ந்தமருதில் உள்ள வீட்டில் இருந்ததாகவும் சாதியா மேலும் தெரிவித்தார். தங்களது குழுவினர் தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக சஹ்ரானின் சகோதரி (ரில்வானின் மனைவி) அன்று காலை சாதியாவிடம் கூறியிருக்கிறார்.

எதற்கும் பயப்பட வேண்டாம். உங்களைப் பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம் என்று சஹ்ரானின் தாயார் சாதியாவிடம் கூறியிருக்கிறார். இந்தத் தகவல்கள் அனைத்தும் சாதியாவிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *