நாட்டுக்காக மைத்திரி, ரணில், மஹிந்த இணையவேண்டும்!

அரசியல் போட்டிகளை கைவிடுத்து இன மற்றும் மத ஐக்கியத்துக்காகவும், நல்லிணக்கத்துக்காகவும் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் ஓரணியில் திரண்டு செயற்பட வேண்டும் – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட எம்.பியுமான வேலுகுமார் தெரிவித்தார்.

அத்துடன், வாக்குவேட்டை நடத்துவதற்காக மக்களின் உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயங்களில் எவரும் அரசியல் விளையாட்டை அரங்கேற்றக்கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக மேலும்குமார் எம்.பி. மேலும் கூறியவை வருமாறு,

‘’ அரசியல் என்பது மக்கள் சேவைக்கான களமாகும். எனவே, தன்நலம் துறந்து, பொதுநலம் கருதியே அக்களத்தில் காலடி வைக்கவேண்டும். எனினும், அதை மோதல் களமாக பார்க்கும் சூழ்நிலையே எமது நாட்டில் திட்டமிட்ட அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால்தான், அதிஉயர் சபையாகக் கருதப்படுகின்ற பாராளுமன்றத்தில்கூட மிளகாய்தூள் தாக்குதல் நடத்தப்படுகின்றது.

ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்து செயற்படக்கூடாது, இனவாதத்துக்கும், மதவாதத்துக்கும் தூபமிட்டுதான் பிரசாரம் செய்யவேண்டும் என்பதெல்லாம் இங்கு எழுதப்படாத அரசியல் கோட்பாடுகளாக மாறியுள்ளன. குறிப்பாக அரசியலில் உயர்பதவிகளை வகிப்பவர்கள் தமது சொந்த விருப்பு, வெறுப்புகளை அரசியலுக்குள் புகுத்தினால் அது நாட்டு மக்களுக்கே பேராபத்தாக அமையும்.

இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.   உஷாரடைந்திருந்தால் பேரவலத்தை  தடுத்திருக்கலாம். எனினும், அரசியல் போட்டிகாரணமாக பாதுகாப்புசபைக் கூட்டம்கூட, கட்சிகூட்டம்போலவே நடத்தப்பட்டுள்ளது.

பிரதமர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பொலிஸ்மா அதிபர் ஆகியோர் நெடுநாட்களாக அழைக்கப்படவில்லையெனக் கூறப்படுகின்றது. பாதுகாப்பு சபைக் கூட்டம் என்பது திருமண வீடோ அல்லது மரணவீடோ அல்ல. என்னதான் பகைமைகள் இருப்பினும் பதவிநிலையை கருத்திற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் அழைக்கப்பட்டிருக்கவேண்டும்.

அவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்காவிட்டால் ஏன் விடுக்கப்படவில்லை என மறுபக்கத்தில் இருந்து கேள்வி எழுப்பட்டிருக்கவேண்டும். அரசியல் காரணமாக இவை இரண்டுமே நடந்ததாக தெரியவில்லை.

உள்நாட்டு போரால் மூன்று தசாப்தங்களாக இந்நாட்டில் மக்கள் அச்சத்துடனும், சந்தேகத்துடனுமே நாட்களை கடத்தினார்கள். காலையில் வெளியில்சென்றால் மாலையில் வீடு திரும்புவோமா என்பதற்கு உத்தரவாதமிருக்கவில்லை. தற்போது மீண்டும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டிருப்பதாக மக்கள் அஞ்சுகின்றனர்.

புறக்கணிப்புகளும், அடக்குமுறைகளுமே போருக்கு வழிசமைத்தன. இதற்கு அரசியலே பிரதான காரணமாக அமைந்தது. மீண்டும் அந்த தவறை எவரும் கனவில்கூட நினைத்துபார்க்ககூடாது.

21/4 தாக்குதலையடுத்து நாட்டில் ஏற்பட்ட பதற்றநிலைமை இன்னும் முழுமையாக தணியவில்லை. பயங்கரவாத தாக்குதலை மையப்படுத்தி ஒரு சிலர், ஓர் இனத்துக்கு எதிராகவும், மதத்துக்கு எதிராகவும் பிரசாரம் முன்னெடுத்துவருகின்றனர். மேலும் சிலர் இதை எதிர்காலத்தில் எப்படி அரசியலாக்கலாம் என சந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.

எனவே, இன மற்றும் மத ஐக்கியத்தை குழப்பும் வகையில் கருத்து வெளியிடக்கூடாது என அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தத்தமது கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நாட்டில் அவ்வப்போது அசம்பாவிதங்கள் அரங்கேறுவதை தடுப்பது கடினமாக அமையும்.

எல்லா விடயங்களிலும் அரசியலை திணிக்ககூடாது. மக்களின் உணர்வுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை மிகவும் அவதானத்துடன்தான் அணுகவேண்டும். ஆகவே, நாட்டின்நலன்கருதி, இன ஐக்கியம், மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோர் ஓரணியில் திரண்டு செயற்படவேண்டும். பொதுவான நிலைப்பாடுகளை எடுக்கவேண்டும். அப்போதுதான் மக்கள் மனங்களிலுள்ள சந்தேகம் அகன்று மீண்டும் சகவாழ்வு திரும்பும்.’’ என்றார் வேலுகுமார் எம்.பி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *