ஐக்கியமும் சமாதானமும் நிலைத்தோங்க புனித ரமழானை வரவேற்போம்! – கிழக்கு முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்

“பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து நாட்டில் ஐக்கியமும் சமாதானமும் நிலைத்தோங்க புனித ரமழானை வரவேற்று தொடர்ந்தும் பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம்” எனக் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் நைற்றா நிறுவனத்தின் தலைவருமான நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

புனித ரமழான் ஆரம்பமாகின்றமை குறித்து அவர் விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

“என்றுமில்லாதவாறு மிகவும் இக்கட்டான – நெருக்கடியான நிலைமைகளுக்கு மத்தியில் இம்முறை நமது மக்கள் புனித ரமழான் நோன்பைக் கடைப்பிடிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டின் பாதுகாப்பு, இன,மத ஐக்கியம், சாந்தி,சமாதானம் மற்றும் சமூகங்களுக்கிடையிலான புரிந்துணர்வு என்பனவற்றைக் கருத்தில்கொண்டு முஸ்லிம் மக்கள் சகிப்புத் தன்மையுடன் இம்முறை புனித நோன்பைக் கடைப்பிடிக்க திடசங்கற்பம் கொள்ளவேண்டும்.

எமது பிரார்த்தனைகள் நாட்டில் புரையோடிப்போயுள்ள நம்பிக்கையின்மைகளைத் தகர்த்து, நல்லுறவுகளை வளர்க்கவும் சந்தேகங்களைப் போக்கி புரிதல் – சௌபாக்கியங்களை உருவாக்கவும் வழிகோல வேண்டும்.

காலம் தற்போது நமக்கொரு நெருக்குதலை ஏற்படுத்தியிருக்கின்றது இதனூடாக வேதனைகளும், சோதனைகளும் நம்மை ஆட்கொள்ளலாம் இவற்றை எல்லாம் நாம் எமது தொழுகைகளின் மூலமாகவே முறியடித்து வெற்றி கொள்ளவேண்டும். இதற்கான சிறந்த காலமாக இம்முறைவரும் நோன்பை நாம் கடைப்பிடித்தொழுக திடசங்கற்பம் கொள்வோமாக!” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *