வன்முறைகளைத் தவிர்த்து முன்னோக்கிச் செல்வோம்! – பேராயர் அழைப்பு

“இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று தாக்குதல்களை நடத்தியவர்கள் முஸ்லிம்கள் என்றோ இஸ்லாமியர்கள் என்றோ நம் கருதவில்லை. நாம் முஸ்லிம் சகோதரர்களைக் குறைகூற முடியாது. குற்றம்சாட்டவும் முடியாது. அவர்கள் தவறிழைக்கவில்லை. இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் மோதல்களுக்குச் செல்ல வேண்டியதில்லை.”

– இவ்வாறு தெரிவித்தார் கொழும்பு மாவட்டப் பேராயர் கார்தினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை.

நீர்கொழும்பில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட இன மோதலையடுத்து அடுத்து அந்தப் பகுதிக்கு நேற்றுப் பேராயர் சென்றிருந்தார். அவருடன் அகில இலங்கை ஜம்இய்த்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எம்.ஐ.எம்.றிஸ்வியும் சென்றிந்தார். பேராயர், அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அச்சத்தால் பலகத்துறைப் பெரிய பள்ளிவாசலில் தங்கியுள்ள மக்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். அதன்பின்னர் அங்கு இஸ்லாமியத் தலைவர்கள் மற்றும் பல தரப்பினர் மத்தியில் உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“முஸ்லிம்களுக்கு எதிரான போராட்டத்துக்குக் கிறிஸ்தவர்கள் வரவே மாட்டார்கள் என்ற சான்றிதழை நான் நம்பிக்கையுடன் தருகின்றேன். இந்த விடயங்களிலிருந்து நாம் விடுபட்டு முன்னோக்கிச் செல்வது பற்றி சிந்திக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

இந்த நாட்டில் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே எமது விருப்பம். நாம் எல்லோரும் சகோதரர்களே. எமக்குள் பிரிவினைகள் வேண்டாம். வன்முறைகள் ஊடாக எதனையும் சாதிக்க முடியாது. ஓர் இனத்தை இன்னொரு இனம் அடக்கி ஆளவே முடியாது. அப்பாவி மக்களின் உயிர்களுடன் – அவர்களின் சொத்துக்களுடன் எவரும் விளையாடக்கூடாது. குற்றவாளிகள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” – என்றார்.

அதேவேளை, கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த பேராயர்,

“நீர்கொழும்பில் நடைபெற்ற கசப்பான சம்பவத்திற்கு அங்குள்ள வாசிகள் காரணமாக இல்லை. வெளியிலிருந்து வந்தவர்களே காரணமாக இருக்கின்றார்கள்.

வெளியாரை அழைத்து வந்து அவர்களுக்கு அதிகமாக மது அருந்தச் செய்து முஸ்லிம்களையும், சிங்களக் கத்தோலிக்கர்களையும் பிளவுபடுத்தி மோதல்களை உருவாக்கச் செய்யும் செயற்பாடொன்றே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

மதுப்பாவனையையும் போதைப்பொருளையும் இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் அதேநேரம், தற்போதைய சூழலில் நீர்கொழும்புப் பகுதியில் உள்ள அனைத்து மது விற்பனை நிலையங்களையும் மூடுவதற்கான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று அரச தரப்பைக் கோருகின்றேன்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *