அப்பாவி மாணவரைச் சிறைவைப்பது மிகப்பெரிய மனித உரிமை மீறல்! – உடன் விடுவியுங்கள் என அரசிடம் சம்பந்தன் வலியுறுத்து

“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.பபில்ராஜ் ஆகியோரை அரசு உடன் விடுதலை செய்ய வேண்டும். குற்றங்கள் எதனையும் புரியாத அப்பாவி மாணவர்களைச் சிறையில் அடைத்து வைத்திருப்பது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

யாழ். பல்கலைக்கழக வளாகம் இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் நேற்றுமுன்தினம் சுற்றிவளைக்கப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களும், மாவீரர்களின் புகைப்படங்களும் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் எம்.திவாகரன், செயலர் எஸ்.பபில்ராஜ் ஆகிய இருவரும் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகாலச் சட்டம், அரசியல் சிவில் உரிமைகளுக்கான சரத்வத்தேச பட்டயச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குத் தாக்கல் செய்தனர். மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலர் ஆகியோர் நேற்றுமுன்தினம் இரவு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனிசாமி பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர். இதன்போது அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

மாணவர்களின் கைதால் வடக்கு கல்விச் சமூகம் கொதிப்படைந்துள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவியபோது அவர் தெரிவித்ததாவது:-

“இராணுவம் மற்றும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் ஆகிய இருவரையும் எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டுக் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது, மாணவர்கள் இருவரும் உண்மை நிலைவரத்தைக் கூறியுள்ளனர்.

மாணவர் ஒன்றிய அறையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் படங்கள் மாத்திரமே இருந்துள்ளன. இதை வைத்துக்கொண்டு அவர்கள் மீது குற்றம் சுமத்த முடியாது. அந்தப் படங்கள் கடந்த காலங்களில் வைக்கப்பட்டிருந்தவை. இதைவிட சந்தேகத்துக்கிடமான பொருட்கள் எவையும் மாணவர் ஒன்றிய அறையிலிருந்து மீட்கப்படவில்லை.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் ஆகியோரைப் பிணையில் விடுதலை செய்வதற்குச் சட்டமா அதிபரின் இணக்கம் தேவை. அவரது இணக்கத்தைப் பெறுவதற்கான நடவடிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்டுள்ளது.

உண்மையில் இரு மாணவர்களும் அப்பாவிகள். குற்றங்கள் எதனையும் புரியாத அப்பாவி மாணவர்களை சிறையில் அடைத்து வைத்திருப்பது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும். அவர்கள் மீது வழக்குத் தொடரும் அளவுக்கு அவர்கள் குற்றங்கள் எதையும் செய்யவில்லை. பிணையில் மட்டுமன்றி குற்றச்சாட்டுக்களிலிருந்தும் அவர்கள் முழுமையாக உடன் விடுவிக்கப்பட வேண்டும் என்று அரசிடம் நாம் கோருகின்றோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *