நாடு கடத்தப்பட்ட மதுஷ் கட்டுநாயக்கவில் கைது!

டுபாயில் கைதுசெய்யப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும் பிரபல போதைப்பொருள் வர்த்தகருமான மாக்கந்துர மதுஷ் என அழைக்கப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே மதுஷ் லக்‌ஷித இன்று அதிகாலை நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 5 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மாக்கந்துர மதுஷை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

தென் மாகாண முன்னாள் அமைச்சர் டேனி ஹித்தெட்டியவைக் கொலை செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மாக்கந்துர மதுஷ், போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடையவர் எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதனைத்தவிர, பாதாள உலகக் குழுத் தலைவரான சமயங் பயணித்த சிறைச்சாலை பஸ் மீதும் துப்பாக்கிப் பிர​யோகம் மேற்கொண்டு கொலை செய்த குற்றச்சாட்டும் மாக்கந்துர மதுஷ் மீது சுமத்தப்பட்டுள்ள மற்றுமொரு குற்றச்சாட்டாகும்.

இவ்வாறான பின்புலத்தில் நாட்டிலிருந்து தப்பிச்சென்று டுபாயில் வாழ்ந்த மாக்கந்துர மதுஷ் உள்ளிட்ட குழுவினர், கடந்த பெப்ரவரி 5ஆம் திகதி போதைப்பொருளுடன் ஹோட்டலொன்றில் கைதுசெய்யப்பட்டனர்.

டுபாயிலுள்ள நட்சத்திரக் ஹோட்டலில் இடம்பெற்ற தமது பிள்ளையின் பிறந்தநாள் விழாவின்போதே குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டார்.

இதேவேளை, மாக்கந்துர மதுஷுடன் கைதுசெய்யப்பட்ட 30 பேர் ஏற்கனவே நாடு கடத்தப்பட்டனர்.

இவர்களில் மாக்கந்துர மதுஷின் உதவியாளரான கஞ்சிப்பானை இம்ரான் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினால் தடுத்துவைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதோடு, மேலும் சிலர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

டுபாயில் கைதுசெய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ், இலங்கையில் தமக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளது எனவும், தம்மை நாடு கடத்த வேண்டாம் எனவும் அந்நாட்டின் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

எவ்வாறாயினும், மாக்கந்துர மதுஷை நாடு கடத்துமாறு இலங்கை அரசின் சார்பில் வௌிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, டுபாய்க்குச் சென்று அந்நாட்டு அதிகாரிகளிடம் நேரில் வலியுறுத்தியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *