சஹ்ரானின் சகோதரர் வீட்டில் தற்கொலை அங்கி மாட்டியது! – மாமாவும் மாமியும் கைது

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியாகக் கருதப்படும் தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாசீமின் சகோதரனான ரிழ்வானின் இல்லத்திலிருந்து தற்கொலை அங்கி உட்பட பெருமளவு பொருட்கள் இன்று வியாழக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், ரிழ்வானின் மாமி மற்றும் மாமி இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

சஹ்ரானின் சகோதரரான ரிழ்வான், சாய்ந்தமருது தற்கொலைக் குண்டு வெடிப்பில் பலியாகிவிட்டார். ரிழ்வானின் மனைவியும் பிள்ளைகளும் அந்தச் சம்பவத்தில் பலியாகிவிட்டனர். அவர்களுடைய காத்தான்குடி வீட்டிலிருந்தே தற்கொலை அங்கி உட்பட பெருமளவு பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

தற்கொலை அங்கி, அலைபேசிகள் – 4, ஏ.ரி.எம்.அட்டைகள், வங்கிப் புத்தகம், மரணமடைந்த ரிழ்வான் தம்பதிகளின் நான்கு குழந்தைகளின் 4 புகைப்படங்கள், ரிழ்வானின் தேசிய அடயாள அட்டை உட்படப் பல பொருட்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்​து மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போதே இந்தப் பொருட்கள் சிக்கின என்று காத்தான்குடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கஸ்தூரி ஆராச்சி தெரிவித்தார்.

அவ்வீட்டிலிருந்த ரிழ்வானின் மாமா மற்றும் மாமி ஆகியோரும் கைதுசெய்யப்பட்டு காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *