ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒழித்துக்கட்ட மு.கா. பேராதரவு! – ஹக்கீம் தெரிவிப்பு

“மோசமான – கொடூரமான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை இலங்கையில் இருந்து முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கு நாம் பூரண ஆதரவு வழங்குவோம்.”

– இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சிரச தொலைக்காட்சியில் நேற்று இடம்பெற்ற ‘சட்டன’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாம் எதிர்பாத்திராத தருணத்தில் மிகவும் மோசமான தாக்குதல் ஒன்று இடம்பெற்று அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதோடு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

விடுதலைப்புலிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கு 12 வருடங்கள் சென்றன. ஆனால், இந்தத் தீவிரவாதிகள் எடுத்த எடுப்பில் அதைச் செய்துள்ளனர். இறுதி ஆயுதமான தற்கொலையை ஆரம்பத்திலேயே செய்துள்ளனர்.

இந்தத் தீவிரவாதம் உடனடியாகத் தோற்கடிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் முஸ்லிம்கள் உள்ளனர். இதனால்தான் அவர்கள் சாய்ந்தமருதில் இந்தத் தீவிரவாதிகளைக் காட்டிக்கொடுத்தனர்.

அந்தச் சம்பவத்தில் தீவிரவாதிகள் குடும்பத்தோடு தற்கொலை செய்துள்ளனர். இப்படிச் செய்ய முடியும் என்றால் அவர்கள் எந்தளவு மூளைச் சலவை செய்யப்பட்டிருப்பார்கள் என்று உணர முடிகின்றது.

சஹ்ரான் ஹாசீம் தொடர்பில் உலமா சபை ஏற்கனவே முறைப்பாடு செய்திருந்தது. அந்த முறைப்பாட்டுக்கு அமைவாக புலனாய்வுப் பிரிவு செயற்பட்ட போதிலும் இந்த அளவுக்கு அவர் செல்வார் என்று புலனாய்வுப் பிரிவினர் எதிர்பார்த்திருக்கவில்லை.

முஸ்லிம்களை வைத்து முஸ்லிம்களைக் கொலை செய்வதுதான் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் செயல். அவர்கள் முஸ்லிம்கள் இல்லை. இந்த மோசமான – கொடூரமான தீவிரவாதிகளை இலங்கையில் இருந்து முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கு நாம் முழு ஆதரவு வழங்குவோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *