சாவகச்சேரியில் குடும்பஸ்தர் வாளால் வெட்டிப் படுகொலை! – 7 பேர் படுகாயம்; கெடுபிடிகளுக்கு மத்தியிலும் அட்டூழியம்

யாழ். சாவகச்சேரி, பாலாவி தெற்கில் நடத்தப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் நடந்துள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த தம்பிராஜா பொன்னுத்துரை (வயது – 62) என்பவரே உயிரிழந்துள்ளார். யே.திலிசாந் (வயது – 25), சோ.கணேசமூர்த்தி (வயது – 29), தம்பிராஜா யோகராஜா (வயது – 46), த.கவிதரன் (வயது – 38), ந.வளர்மதி (வயது – 52), செ.குமார் (வயது – 35), வை.தவசீலன் (வயது – 39) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

சுமார் 30 பேர் அடங்கிய கும்பல் ஒன்று ஈட்டிகள், கூரிய ஆயுதங்களுடன் வந்து வீடுகளுக்குள் புகுந்து தாக்குதல் நடந்தித் தப்பிச் சென்றுள்ளது என்று கூறப்படுகின்றது.

உயிரிழந்தவரின் மார்பில் கூரிய ஆயுதம் ஒன்றால் பல தடவைகள் குத்தப்பட்டுள்ளது என்று சம்பவ இடத்தில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.

காயமடைந்தவர்கள் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 3 பேர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

கடந்த இரு வாரகாலமாக இரு தரப்பினருக்கு இடையே முறுகல் நிலைமை இருந்தது என்று பிரதேச மக்கள் கூறுகின்றனர். மணல் அகழ்வு தொடர்பான பிணக்கே இந்த முறுகல் நிலமைக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பிரச்சினை காரணமாகக் கடந்த மாதமும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது என்றும் அந்தப் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

நேற்றுமுன்தினமும் அங்கு வந்த குழுவொன்று தாக்குதல் நடத்தித் தப்பிச் சென்றிருந்தது என்றும், நேற்று முப்பது பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்திச் சென்றுள்ளது என்றும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

தற்போது இராணுவத்தினரும், பொலிஸாரும் வீதிகளில் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில் இத்தனைபேர் ஆபத்தான ஆயுதங்களுடன் வந்து தாக்குதல் நடத்தி எவ்வாறு தப்பிச் சென்றனர் என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பாகப் பொலிஸார் அசிரத்தைப் போக்குடன் நடந்துகொள்கின்றனர். அதனாலேயே தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் அந்தப் பகுதியில் நடக்கின்றது என்றும் மக்கள் விசனம் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *