முஸ்லிம் பெண்களைப் பயன்படுத்தியும் தற்கொலைத் தாக்குதல் நடத்தத் திட்டம்! – ஆதாரங்கள் சாய்ந்தமருதுவில் கண்டுபிடிப்பு

நாட்டிலுள்ள மதத் தலங்களுக்குள் முஸ்லிம் பெண்களை சிங்களப் பெண்கள் போன்று வேடமிட்டு தற்கொலைத் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்தது எனப் தேசிய புலனாய்வுப் பிரிவு கண்டுபிடித்துள்ளது.

சர்வதேச தீவிரவாத இயக்கமான ஐ.எஸ். ஐ.எஸ்ஸின் வழிநடத்தலில் இயங்கும் தேசிய தௌஹித் ஜமா அத் அமைப்பால் இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

தாக்குதல்களுக்குப் பயன்படுத்துவதற்காகத் தயார் நிலையிலிருந்த ஆடைகளை, சாய்ந்தமருதுப் பிரதேசத்தில் குண்டு வெடித்த வீட்டில் இருந்து தேசிய புலனாய்வு பிரிவு கண்டுபிடித்துள்ளது.

கடந்த 29ஆம் திகதி கிரிஉல்ல பிரதேசத்தில் ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் முஸ்லிம் பெண்கள் சிலரால் 9 வெள்ளை ஆடைகள் மற்றும் மேலும் சில ஆடைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. அதற்காக 29 ஆயிரம் ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் ஆடை கொள்வனவு செய்யும் காட்சி அருகில் இருந்த சி.சி.ரி.வி. கமராவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது வீட்டில் இருந்து தற்போது 5 ஆடைகள் கிடைத்துள்ளன. ஏனைய 4 ஆடைகளைத் தேடும் நடவடிக்கைகளைப் பாதுகாப்புப் பிரிவு மேற்கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

மீட்கப்பட்ட வெள்ளை ஆடைகளை முஸ்லிம் பெண்கள் சாதாரணமாக அணிவதில்லை. எனவே, இதனை சிங்களப் பெண்கள் போன்று அணிந்து சென்று மதத் தலங்களுக்குள் தாக்குதல் மேற்கொள்வதற்காகவே மேற்படி ஆடைகள் கொள்வனவு செய்யப்பட்டிருக்கலாம் என்று புலனாய்வுப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *