சிரியாவில் வீழ்ந்த ஐ.எஸ். இலங்கையை களமாக்கியது எப்படி?

இலங்கையில் ஈஸ்டர் தினமான கடந்த 21ஆம் திகதி தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் இதுவரை 253 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. தாக்குதல் தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டது உள்ளூரில் செயல்படும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்புதான் என இலங்கை அரசு கூறுகிறது. ஆனால், இஸ்லாமிய அரசு என்று தங்களைக் கூறிக்கொள்ளும் ஐஎஸ் அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக அறிவித்தது.

இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டு 2 நாட்களுக்கு பிறகே, ஐ.எஸ் அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது. அதன் செய்தி நிறுவனமான ‘அமெக்’ என்ற இணையதளத்தில் இந்த அறிவிப்பு வெளியானது.

தாமதமாக பொறுப்பேற்றதன் மூலம் ஐ.எஸ் அமைப்பு தானே தாக்குதலில் ஈடுபட்டதா என சந்தேகம் எழுகிறது என சிலர் சுட்டிக்காட்டுகின்றனர். இவ்வாறு தாமதமாக அறிவிப்பது ஐ.எஸ் அமைப்புக்கு வழக்கமானது இல்லை.

ஆனால், தொடர் தாக்குதல் இன்னும் முடிவடைந்ததா இல்லையா என காத்திருத்து பின்னர் அறிவிப்பை வெளியிட்டுருக்கலாம். அல்லது, அதற்கான ஆதாராங்களை திரட்டுவதற்காக தாமதமாகியிருக்கலாம். நேரடியாக தொடர்பில்லாவிட்டாலும், உள்ளூர் அமைப்புகளுக்கு ஐ.எஸ் உதவியிருக்கலாம். தாக்குதல் நடத்தப்பட்ட தொழில்நுட்ப உத்திகள் ஐ.எஸ் அமைப்பின் தாக்குதலுடன் ஒத்திருப்பதாகத் தெரிகிறது.

எழுத்துப்பூர்வமாக தெரிவித்த பின்னர், தாக்குதலில் 7 பேர் ஈடுபட்டதாக, புகைப்படம் மற்றும் காணொளி ஒன்றையும் ஐ.எஸ் வெளியிட்டது.

புகைப்படத்தில் இருக்கும் நபர்களில் ஒருவர் முகமூடி அணியவில்லை. அந்த நபர் அபு உபய்தா என்று அறியப்படும் அந்த நபர் உள்ளூர் பயங்கரவாதியான சஹ்ரான் காசிம் என்று நம்பப்படுகிறது.

ஏழு பேர் தாக்குதலில் ஈடுபட்டதாக ஐ.எஸ் கூறியது. ஆனால், அந்த குழுப் புகைப்படம் மற்றும் காணொளியில் 8 பேர் இருக்கிறார்கள்.

அத்துடன் ஐ.எஸ் வெளியிட்ட காணொளி சில மணிநேரங்களுக்கு முன்னர், சமூக வலைதளங்களில் ஏற்கனவே பகிரப்பட்டவை.

தாக்குதலில் ஈடுபட்டவர்களாக குறிப்பிடப்பட்டவர்களின் பெயர்களும் ஏற்கனவே வெளியானவைதான். சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படம் மற்றும் பெயர்கள் தொடர்புபடுத்தி தாங்கள்தான் தாக்குதல் நடத்தியதாக ஐ.எஸ் கூறியிருக்கலாம்.

சிரியாவில் ஆதிக்கம் சரிவு கண்டவுடன், ஐ.எஸ் அமைப்பின் வலிமை ஒழிந்ததாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், தாங்கள் சரியவில்லை என்பதை தெரியப்படுத்த உலகளவில் தொடர்ந்து தலைப்பு செய்திகளில் வர ஐ.எஸ் அமைப்பு திட்டமிட்டு வேலைகளை செய்கிறது எனலாம்.

மார்ச் மாத இறுதியில், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான மாலி, பர்கினா பாசோவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்றது.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் நடக்கும் தாக்குதலுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.

பின்னர், காங்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் தங்களால்தான் நடந்ததாக கூறியது. தற்போது, இலங்கையிலும் பொறுப்பேற்றுள்ளது.

காங்கோ மற்றும் இலங்கையில் இதற்கு முன்பு, நடந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்றதில்லை. இலங்கையில் ஐ.எஸ் அமைப்பால் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று அதன் ஆதரவு அமைப்புகள் செய்தியை பரவவிட்டு, அதன்மூலம் வன்முறை கட்டவிழ்க்க உள்ளூர் அமைப்புகள் முயற்சிக்கின்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *