சில தினங்களில் கிழக்கு வழித்துத் துடைக்கப்படும்! – முழுத் தகவலையும் திரட்டியுள்ளது சி.ஐ.டி.

தேசிய தெளஹீத் ஜமா அத் அமைப்பின் அடுத்தகட்டத் தலைவர் எனக் கூறப்பட்டு வரும் நவ்பர் மௌலவியிடம் தீவிர விசாரணைகளை நடத்தித் தற்கொலைதாரிகளின் முழு விவரங்களையும், தீவிரவாதத் தாக்குதல் தொடர்பான சகல விவரங்களையும் வாரித் திரட்டியுள்ளது சி.ஐ.டி.

இதனையடுத்து அடுத்து வரும் சில நாட்களுக்குள் பயங்கரவாதக் குழுக்கள் முழுமையாகக் கிழக்கு மாகாணத்திலிருந்து இல்லாதொழிக்கப்படும் என கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான கட்டளையிடும் தளபதி மேஜர் ஜெனரால் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

சி.ஐ.டியினர் திரட்டிய விவரங்களின்படி ,மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் மொஹம்மட் நஸார் மொஹம்மட் அஸார், கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் இப்ராஹிம் இல்ஹாம் அஹ்மத், தெமட்டகொடை வீட்டில் பாத்திமா ஜெப்ரியா, தெஹிவளையில் அப்துல் லத்தீப் ஜெமீல், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் அலாவுதீன் அஹ்மத் முவாத், கிங்ஸ்பரி ஹோட்டலில் மொஹம்மட் முபாரக் ஆகியோர் தற்கொலை தாக்குதல் நடத்தியுள்ளனர் என அறியப்பட்டுள்ளது.

தம்புள்ளையில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் உறவினர் என்றும் தேசிய தெளஹீத் ஜமா அத்தின் அடுத்த தலைவராக பொறுப்பேற்கவிருந்தார் எனவும் கூறப்படும் நவ்பர் மௌலவி என்பவரிடம் நடத்தப்படும் விசாரணைகளில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.

2017 மார்ச் 10 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றையடுத்து தலைமறைவான சஹ்ரான் , புத்தளம் வனாத்திவில்லு லெக்ரோவத்த பாழடைந்த இடமொன்றில் அடிப்படைவாதக் கருத்துக்களைப் பயிற்றுவித்து வந்தார் எனத் தெரியவந்துள்ளது.

இவருடன் இணைந்து செயற்பட்டார் எனச் சொல்லப்படும் சாதிக் அப்துல்லா, சாஹித் அப்துல்லா ஆகியோரையும் பொலிஸ் தேடுகின்றது.

சஹ்ரானுடன் முகநூலில் நெருக்கமாக இருந்தவர்களின் பின்னணி குறித்தும் தேடப்படுகிறது.

சஹ்ரான் பாவித்ததாகச் சொல்லப்படும் தொலைபேசியின் சிம் அட்டை மருதமுனை ஒருவரின் பெயரில் இருந்துள்ளது. அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரின் உறவினர் ஒருவர் ஏமனில் இருக்கிறார் எனவும், அவர் ஐ.எஸ். இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளார் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.

ஏமனில் உள்ள உறவினருக்கு சிம் அட்டையை மருதமுனைவாசி வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால், அவர் அந்த சிம்மை சஹ்ரானுக்கு வழங்கியுள்ளார். இது பற்றி விசாரணைகள் நடக்கின்றன.

சஹ்ரானுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரிக்கத் தனி குழு ஒன்று செயற்படுகிறது. பள்ளிவாசல்களில் கத்தி மற்றும் வாள்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறித்து விசாரணைகள் நடக்கின்றன.

மாவனல்லை புத்தர் சிலை தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பழிவாங்கப் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் தற்பாதுகாப்புக்கு இந்த வாள்கள் வழங்கப்பட்டதாகக் கைதானார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்குளியில் ஒருவரிடம் மட்டும் 200 வாள்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 300 வாள்கள் கொள்வனவு செய்யப்பட்டு அவை பள்ளிவாசல்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

இதற்கான பணத்தை தெமட்டகொட வர்த்தகர் ஒருவர் வழங்கினார் எனக் கூறப்பட்டிருப்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது.

முக்கியமான சந்தேகநபர்கள் சிலர் மலேசியா செல்ல முயன்று சிக்கியுள்ளனர் எனவும் பொலிஸ் கூறுகின்றது.

இன்னும் சில தினங்களில் கிழக்கு மாகாணம் சல்லடை போடப்பட்டு அங்குள்ள தீவிரவாதிகளை முற்றாக அள்ளி எடுப்பதற்கான திட்டங்களை சர்வதேசப் புலனாய்வு அமைப்புக்களின் உதவியுடன் இலங்கைப் படைகள் செயற்படுத்தவுள்ளன எனக் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *