தற்கொலைதாரிகள் 34 பேர் சிக்கினர்; கிழக்கே சஹ்ரான் குழுவின் கோட்டை!

சி.ஐ.டி. விசாரணையில் முக்கிய தகவல்கள்

“தற்கொலை செய்வதையோ அல்லது தற்கொலை தாக்குதல்களையோ இஸ்லாத் அனுமதிக்கவில்லை என்று கூறினாலும் அவர்களில் சிலர் தீவிர அடிப்படைவாதத்துடன் இருந்ததால் ஒன்றும் செய்ய முடியாமல்போனது.”

– இவ்வாறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் சி.ஐ.டியினரிடம் வாக்குமூலம் வழங்கியபோது தெரிவித்ததாக பொலிஸ் உயர்மட்ட தகவல்கள் தெரிவித்தன.

சஹ்ரான் ஹாசீம் தலைமையிலான தேசிய தௌஹீத் ஜமா அத் – அரசியல் பிரிவு மற்றும் இராணுவப்பிரிவு என்று இயங்கியதாகவும் அதில் இராணுவப்பிரிவு தற்கொலைத் தாக்குதல்களை நடத்தத் தீர்மானித்ததாகவும் கைதானோர் கூறியுள்ளனர்.

இது தொடர்பில் மேல்மட்டத்திடம் கூறியபோது அது கணக்கில் எடுக்கப்படவில்லை என்றும், தற்கொலை தாக்குதல் நடத்துவதை பெருமையாக சிலர் கருதினார்கள் என்றும் கைதான சந்தேகநபர்கள் தெரிவித்துள்ளனர் என்று அறியமுடிந்தது .

தற்கொலைத் தாக்குதல்கள் குறித்து பல முக்கிய தகவல்களை வழங்கியுள்ள கைதானவர்கள் – ஆயுதங்கள் இருக்கும் இடங்கள் குறித்தும் முக்கியமான 4 நபர்கள் குறித்தும் தெரிவித்துள்ளனர்.

அதுபோல் இந்தத் தகவல்களின் பிரகாரம் தற்கொலைத் தாக்குதலுக்காகத் தெரிவுசெய்யப்பட்டவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 34 பேரை சந்தேகத்தில் கைதுசெய்துள்ள பொலிஸ், அவர்களிடம் இருந்தும் பல முக்கிய தகவல்களைப் பெற்றுள்ளது.

தற்கொலைத் தாக்குதலுக்கு முன்னர் முக்கியமான தற்கொலைதாரிகள் அனைவரும் சம்மாந்துறை வீடொன்றில் ஒன்றாக அமர்ந்து உணவருந்தியதாகவும், அதற்கு முன்னர் பெருமளவிலானோர் காத்தான்குடி வீடொன்றில் ஒன்றாக உணவருந்தியதாகவும் தெரியவந்துள்ளது.

தற்கொலைதாரிகளில் சிலர் இந்தியாவில் பயிற்சிகளை எடுக்கச் சென்றிருப்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *