சாய்ந்தமருதில் நடந்தது என்ன?

சாய்ந்தமருது, கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்து ஊரடங்குச் சட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருக்கின்றது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர இன்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், சாய்ந்தமருதில் என்ன நடந்தது என்பதையும் அவர் விபரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்தவை வருமாறு:-

“நேற்றைய தினம் கல்முனை பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட வாகனப் போக்குவரத்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கு, சாய்ந்தமருது பிரதேசத்தில் சில சந்தேகநபர்கள் இருக்கின்றனர் எனச் செய்தி கிடைத்துள்ளது.

இந்தக் கான்ஸ்டபிள் இந்தத் தகவலை தமது சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைவாக உடனடியாகச் செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் குறிப்பிட்ட வீட்டை பரிசோதிப்பதற்காக வீட்டை நெருங்கும் வேளையில் அந்த வீட்டிலிருந்து பொலிஸார் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்தோடு அந்த வீட்டில் வெடிப்புச் சம்பவமும் இடம்பெற்றுள்ளது. வீட்டிலிருந்த தற்கொலைக் குண்டுதாரிகள் இந்த வெடிப்புச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இந்தப் பகுதியில் சோதனை நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற வீட்டையும் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

வீட்டில் இருந்த தற்கொலைக் குண்டுதாரிகள் எனச் சந்தேகிக்கப்படும் 3 ஆண்களின் சடலங்களுடன் மேலும் 3 பெண்களின் சடலங்களும், 6 பிள்ளைகளின் சடலங்களும், வீட்டிக்கு வெளியில் இருந்த தற்கொலைக் குண்டுதாரிகள் எனச் சந்தேகிக்கப்படும் மேலும் மூவரினதும் சடலங்கள் அடங்கலாக 15 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

பாதுகாப்புப் பிரிவினர் அந்த வீட்டுக்குச் சென்ற வேளையில் காயங்களுக்குள்ளாகியிருந்த பெண் ஒருவரையும் சிறு குழந்தை ஒன்றையும் வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர். தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *