‘ தீவிரவாதிகள் நுழைந்துவிட்டனர்’ போலி அழைப்பால் பரபரப்பு

தென் இந்தியாவில் போலி தொலைப்பேசி அழைப்பால் பதற்றத்தை ஏற்படுத்திய லொறி ஓட்டுநரை பெங்களூரு போலிஸார் கைது செய்துள்ளனர்.

65 வயது மதிக்கத்தக்க முன்னாள் இராணுவ சிப்பான அவர், பெங்களூரு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைப்பேசியில் அழைத்து தமிழ்நாட்டில் உள்ள ராமநாதபுரத்தில் பயங்கரவாதிகள் நுழைந்திருப்பதாக தெரிவித்தார்.

அவர் மேலும், தென் இந்தியாவில் உள்ள கோயில்களை பயங்கரவாதிகள் இலக்கு வைக்கக்கூடும் என போலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளார்.

இந்த அழைப்பை அடுத்து, கர்நாடகா டிஜிபி நீலமணி ராஜு, தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, மஹாராஷ்டிரா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களுக்கு எச்சரிக்கை செய்தி அனுப்பினார்.

லாரி ஓட்டுநர் தமிழிலும், தடுமாறிய இந்தியிலும் பேசியதாகவும், மேலும் அவர் பெங்களூரு எல்லையில் உள்ள ஓசூருக்கு சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார் என டிஜிபியின் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த ஓட்டுநர் தனது பெயர் சுவாமி சுந்தர மூர்த்தி என்று அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

மேலும் 19 பயங்கரவாதிகள் ராமாதபுரத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாம்பன் பாலத்தில் வெடி குண்டு வைக்கப்பட்டுள்ளதாக தகவலையடுத்து மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீஸார், வெடிகுண்டு தடுப்பு போலீஸார், மோப்ப நாய் உதவியுடன் பாம்பன் ரயில் மற்றும் சாலை பாலங்களில் விடிய விடிய தீவிர சோதனை நடத்தினர்.

சாலை பாலத்தை கடக்கும் வாகனங்கள், இரு சக்கர வாகனங்களில் செல்லும் நபர்கள், அரசு பேருந்துகளை தீவிர சோதனைக்கு பிறகே பயணத்தை தொடர அனுமதித்தனர்.

ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் இரயில்கள் சோதணைக்குப்பின் இராமேஸ்வரம் இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றன

இந்த தொலைப்பேசி அழைப்பால் கர்நாடகாவில் அனைத்து ரயில்களும், ரயில் நிலையங்களும் தீவிர சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.

இலங்கை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்று ஒரு வார காலமே ஆன காரணத்தால் பதற்றநிலை அதிகரித்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *