குண்டுத் தாக்குதலின் பின் பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த லொறி வத்தளையில் சிக்கியது!

உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னர் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த லொறி வத்தளை – நாயகந்த பகுதியில் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

நாயகந்த பகுதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்தபோதே குறித்த லொறி கைப்பற்றப்பட்டது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு, கொட்டாஞ்சேனைப் பகுதியில் இன்று பகல் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து குறித்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது.

DAE 4197 என்ற இலக்கத்தகடுடன் கைப்பற்றப்பட்டுள்ள குறித்த லொறி, கடந்த 21 ஆம் திகதி கொழும்பு ஷங்கிரி – லா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டவருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிர்த்த ஞாயிறன்று நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலின்போது குண்டுகளைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்பட்ட இந்த லொறி, சம்பவத்தின் பின்னர் லொறி வெடிகுண்டுகளுடன் கொழும்பில் சுற்றித் தெரிகின்றது எனப் பொலிஸாரினால் நேற்றுமுன்தினம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்து.

எனினும், இன்று மீட்கப்பட்ட இந்த லொறியில் வெடிகுண்டுகள் இருக்கவில்லை. இந்தநிலையில், தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் பின்னர் இந்த லொறியில் வெடிகுண்டுகள் ஏற்றப்பட்டதா என விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *