களத்தில் சர்வதேச பொலிஸ் குழுக்கள்; மூலைமுடுக்கெல்லாம் விசாரணைகள்! – தற்கொலைதாரிகள் பயன்படுத்திய 5 வீடுகளுக்குச் ‘சீல்’

தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச பொலிஸ் விசாரணை நிபுணர்களின் ஆதரவுடன் விசாரணைகளை நடத்தும் இலங்கைப் பொலிஸார் தற்கொலைதாரிகள் பயன்படுத்தினர் எனக் கூறப்படும் 5 வீடுகளுக்கு சீல் வைத்துள்ளனர்.

தெஹிவளை, பாணந்துறை சரிக்காமுல்ல, கொள்ளுப்பிட்டி, வத்தளை, நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் விசாரணைகளின் பொருட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.

இன்ரபோல், எப்.பி.ஐ., ஸ்கொட்லன்ட்யார்ட் உட்பட்ட பல உயர்மட்ட வெளிநாட்டு பொலிஸ் புலனாய்வுப் பிரிவுகள் விசாரணைக்காக இலங்கை வந்துள்ளன.

தெமட்டகொடையில் கைதுசெய்யப்பட்டுள்ள இரு தற்கொலைதாரிகளின் தந்தையான பிரபல வர்த்தகர் மொஹம்மட் யூசுப் இப்ராஹிம் பொலிஸ் விசாரணைகளில் பல முக்கிய தகவல்களை வழங்கியுள்ளார் எனவும், அதனடிப்படையில் சில இடங்களுக்குச் சென்ற பொலிஸார் பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் பொருட்களை மீட்டுள்ளனர் எனவும் சொல்லப்படுகின்றது.

தனது மகன்மாரின் செயற்பாடுகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று அவர் ஆரம்பத்தில் கூறியபோதும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் பல முக்கிய தகவல்களைப் பொலிஸ் பெற்றுள்ளனர் எனவும் சொல்லப்படுகின்றது.

அதேவேளை, வர்த்தகர் இப்ராஹிமின் குடும்ப உறுப்பினர்கள் பலர் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

தாக்குதல் சம்பவங்கள் மேலும் நடக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர். இதுவரை 70 பேர் வெடிகுண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *