அவசரகால சட்டம்: முக்கிய 7 தகவல்கள் இதோ!

பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் அவசரகால சட்ட சரத்துக்களை அமுல்படுத்த நாடாளுமன்றம் நேற்று (புதன்கிழமை) ஏகமனதாக அனுமதி வழங்கியது.

இந்நிலையில், அவசரகால சட்டம் எப்போது இலங்கையில் முதன்முதலாக கொண்டு வரப்பட்டது என்று பார்ப்போம்.

காலணித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரம் அடைந்ததன் பின்னர் 1953ஆம் ஆண்டு இலங்கையில் முதன் முறையாக அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

ஒரு கிலோ அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, நாட்டில் ஏற்பட்ட அமைதியற்ற நிலைமையினால் 29 நாட்களுக்கு இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து, நாட்டில் ஏற்பட்ட இன கலவரங்கள், உள்நாட்டு போர் போன்ற காரணிகளினால் அவசரகால சட்டம் தொடர்ந்தும் பல தடவைகள் அமுல்படுத்தப்பட்டிருந்தன.

இந்த நிலையில், இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் அவசர கால சட்டத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கம் ரத்து செய்திருந்தது.

எனினும், கடந்த ஒன்பது வருடங்களுக்கு பின்னர், மீண்டும் அவசர கால சட்ட சரத்துக்களை அமல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையில் ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த தாக்குதலை அடுத்து, ஏற்பட்டுள்ள அச்ச நிலைமையை நீக்கி, இலங்கையில் மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் வகையிலேயே இந்த அவசர கால சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அவசர காலச் சட்டத்தினால் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பில் சட்டத்தரணி ஜி.ராஜகுலேந்திரா தெளிவூட்டினார்.

1. சந்தேக நபர்களை கைது செய்வதற்கு போலீசாருக்கு மாத்திரம் காணப்படுகின்ற அதிகாரம், தற்போது இலங்கையிலுள்ள அனைத்து பாதுகாப்பு தரப்பினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

2. போலீசார் தவிர்ந்த ஏனைய பாதுகாப்பு தரப்பினரால் கைது செய்யப்படும் சந்தேக நபர்கள், அவர்களின் தடுப்பு காவலில் 24 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்துவதற்கான அதிகாரம் காணப்படுகின்றது.

3. 24 மணித்தியாலங்களின் பின்னர் பொலிஸாருக்கு சந்தேகநபர் ஒப்படைக்கப்பட்டு, தடுப்பு காவல் கட்டளையின் பிரகாரம், அவரை ஒரு மாத காலம் தடுத்து வைக்க முடியும்.

4. ஒரு மாத காலத்திற்கு மேல் சந்தே கநபரை தடுத்து வைத்து, விசாரணை செய்ய வேண்டுமாயின், பாதுகாப்பு செயலாளரின் அனுமதியுடன் குறித்த சந்தேகநபர் மேலும் ஒரு மாத காலத்திற்கு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அதிகாரம் காணப்படுகின்றது.

5. கைது செய்யப்படும் சந்தேக நபரிடம் முழுமையான விசாரணை நிறைவடையும் வரை, நீதிமன்றத்திற்கு பிணை வழங்குவதற்கான அதிகாரம் கிடையாது.

6. கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்படும் சந்தேக நபர் குற்றமிழைக்காதவர் என்பதனை பாதுகாப்பு தரப்பு உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் மாத்திரமே பிணை வழங்கப்படும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

7. தேவை ஏற்படும் பட்சத்தில், போலீஸ் ஊரடங்குச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான அதிகாரம் போலிஸ் மாஅதிபருக்கு இந்த சட்டத்தின் ஊடாக வழங்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *