இலங்கைமீதான தாக்குதலுக்கு 8 ஆண்டுகள் திட்டம் வகுப்பு!

” இலங்கைமீது நடத்தப்பட்ட தொடர்குண்டு வெடிப்பு தாக்குதல்களுக்கு சுமார் 8 ஆண்டுகள் வரை திட்டமிடப்பட்டிருக்கலாம். இதனுடன் 300 இற்கும் மேற்பட்டோர் தொடர்புபட்டிருக்கலாம்.” என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா இன்று தகவல் வெளியிட்டார்.

நாடாளுமன்றத்தில் தற்போது (24) நடைபெற்றுவரும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நாமல் குமாரவின் உளவுத் தகவலுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமைகூட புலனாய்வுப் பிரிவால் வழங்கப்பட்ட எச்சரிக்கைக்கு வழங்கப்படவில்லை.

பாதுகாப்பு பேரவைக் கூட்டத்துக்கு பிரதமர் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஆகியோர் பல மாதங்களாக அழைக்கப்படவில்லை. இது தவறான விடயமாகும்.  இது குறித்து பிரதமர்  நாடாளுமன்றத்துக்கு அறிவித்திருக்க வேண்டும்.

ஆனால், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பாதுகாப்பு பேரவைக் கூட்டத்தில் பங்கேற்றனர் என தெரியவருகின்றது. இது நகைப்புக்குரிய விடயமாகும்.

குண்டு தாக்குதல்கள் இடம்பெற்று  48 மணிநேரத்துக்கு பின்னரே பிரதமரை சந்திப்பதற்கு எனக்கு அனுமதி கிடைத்தது. நான் பீல்ட்மார்ஷல் பதவியை வகிப்பவன். பாதுகாப்பு நிலைவரம் குறித்தும் நன்கறிந்தவன். என்னை பயன்படுத்தியிருக்கலாம். நாட்டுக்காக எதையாவது செய்யவே நானும் விரும்புகின்றேன். பதவி, பட்டங்கள் தேவையில்லை.

எனினும், கடந்தகாலங்களில் எனக்கு சட்டம் , ஒழுங்கு அமைச்சு பதவிகூட வழங்கப்படவில்லை. அதற்காக கூறப்பட்ட காரணங்களும் நகைச்சுவையானவை. பிரதி பொலிஸ்மா அதிபர்களின் கோரிக்கைக்கு அமையவா சட்டம், ஒழுங்கு அமைச்சரை நியமிப்பது?

தாக்குதல் பற்றி மேலும் கருத்து வெளியிடலாம். ஆனால், பாதுகாப்பு குறித்து பேச இங்கு சில பண்டிதர்கள் இருக்கின்றனர். எனக்கான பாதுகாப்பும் குறைக்கப்பட்டுள்ளது. ” என்றார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *