பாதுகாப்புச் செயலாளர், பொலிஸ்மா அதிபரை உடன் கைதுசெய்யுங்கள்! – ஜனாதிபதிக்கு விஜயதாஸ எம்.பி. அவசர கடிதம்

“பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர் ஆகியோரை உடன் கைதுசெய்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுங்கள்.”

– இவ்வாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ச.

கடந்த 21ஆம் திகதி நடந்த கொடூர வெடிகுண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக கடந்த 4ஆம் திகதி தேசிய புலனாய்வுப் பிரிவினரின் தகவல் கிடைத்தும் அந்தத் தகவலை அரச தலைவர்களான ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் தெரிவிக்கவில்லை. அரச தலைவர்களுக்கு அறிவிக்காது பாரிய மனிதப் படுகொலைகளுக்குக் காரணமாக இருந்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ்மா பூஜித ஜயசுந்தர ஆகியோரை உடனடியாகக் கைதுசெய்து, விசாரணைகளை நடத்த வேண்டும் என அந்தக் கடிதத்தில் விஜயதாஸ ராஜபக்ச எம்.பி. கோரியுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரைப் பதவி விலகுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்தக் கடித விடயமும் வெளிவந்துள்ளது.

இந்தநிலையில், அவர்கள் இருவரும் பதவி விலகிய பின்னர் கைதுசெய்யப்பட வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *