குண்டுவெடிப்பு சூத்திரதாரியின் தலைமையில் இயங்கிய பள்ளிவாசலில் தீவிர தேடுதல்!

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பால் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான மௌலவி சஹ்ரான் ஹாசீம் தலைமையில் இயங்கி வந்த பள்ளிவாசலில் நேற்றுப் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

காத்தான்குடியில் அமைந்துள்ள பள்ளிவாசலிலேயே இந்தத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தின் கட்டளையைப் பெற்று, இந்தத் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது எனக் காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குமார சிறி, காத்தான்குடி மற்றும் களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளைக் கொண்ட குழுவினரும் விசேட அதிரடிப் படையினரும் இணைந்து இந்தத் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது மேற்படி பள்ளிவாசலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புப் கமராக்களின் காட்சிப் பதிவகம் மற்றும் அங்கிருந்த கணிணி ஆகியவற்றைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தப் பள்ளிவாசல் நிர்வாகத்தின் தலைவராக சஹ்ரான் ஹாசீமும், அதன் செயலாளராக அவரின் சகோதரர் ஜெய்னி ஹாசீமும் செயற்பட்டு வந்துள்ளனர் என்று பொலிஸ் கூறுகின்றனர்.

இந்தப் பள்ளிவாசல், இலங்கை சட்டதிட்டங்களுக்கு அமைய பதிவு செய்யப்படவில்லை என்றும், சமூக சேவை நிலையம் எனும் பெயரில் அது இயங்கி வந்துள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

2017ஆம் ஆண்டில் காத்தான்குடியிலுள்ள இஸ்லாமிய மதப் பிரிவினருக்கும், மௌலவி சஹ்ரான் ஹாசீம் தலைமையிலான தௌஹீத் ஜமா அத் அமைப்பினருக்கும் இடையில் நடைபெற்ற மோதல் ஒன்றையடுத்து, சஹ்ரான் தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்தநிலையிலேயே, இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பால் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் தலைவராக – பிரதான சூத்திரதாரியாக சஹ்ரான் ஹாசீம் செயற்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *