தீவிரவாதக் குழுக்களைக் கூண்டோடு ஒழிப்போம்! குற்றவாளிகளுக்கு அதியுட்ச தண்டனை!! – ரணில் உறுதி

“உயிர்த்த ஞாயிறு தினமன்று இலங்கையில் இரத்த ஆறு ஓடியுள்ளது. அப்பாவி மக்கள் பலர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர். வெளிநாட்டுக் குடிமக்களும் பலியாக்கப்பட்டுள்ளனர். குண்டு வெடிப்புகள் மூலம் இந்தப் படுகொலைகளை அரங்கேற்றிய குற்றவாளிகள் தப்பிப்பிழைக்க ஒருபோதும் இடமளியோம். அவர்களுக்கு அதியுட்ச தண்டனையை வழங்குவோம். இது உறுதி. அத்துடன், இலங்கையில் புதிதாகத் தோற்றம் பெற்றுள்ள தீவிரவாதத் குழுவைக் கூண்டோடு ஒழிப்போம்.”

– இவ்வாறு திட்டவட்டமாகத் தெரிவித்தார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

இலங்கையில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை 8 இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் வெளிநாட்டுப் பிரஜைகள் உட்பட 300 இடற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டமை தொடர்பில் சர்வதேச செய்திச் சேவையொன்றுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் இப்படியொரு மனிதப் பேரவலம் இடம்பெறும் என்று நாம் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. கிறிஸ்தவர்களின் வாழ்வில் மறக்க முடியாத நாளில் எமது நாட்டு மக்களும் வெளிநாட்டுப் பிரஜைகளும் ஈவிரக்கமின்றி சாவடிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தோற்றம் பெற்றுள்ள ஒரு புதிய தீவிரவாதக் குழுவே குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. இந்தக் குழுவின் முக்கிய புள்ளிகளை நாம் மடக்கிப் பிடித்துள்ளோம். இவர்கள் சர்வதேசத்தின் பின்னனியில் செயற்பட்டார்களா என்பது தொடர்பில் ஆழமாக ஆராய்கின்றோம். தீவிர விசாரணைகளின் பின்னர் உண்மைகள் வெளிவரும்.

குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த எமது நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்த மிலேச்சத்தனமான வன்முறையை உலக நாடுகள் கண்டித்துள்ளன. அந்த நாடுகளின் தலைவர்கள், இலங்கையில் தோற்றம் பெற்றுள்ள புதிய தீவிரவாதக் குழுவை முற்றாக இல்லாதொழிக்க எமக்குப் பூரண ஆதரவைத் தருவதாக வாக்குறுதியளித்துள்ளனர்.

எனவே, இலங்கையில் புதிதாகத் தோற்றம் பெற்றுள்ள தீவிரவாதத் குழுவைக் கூண்டோடு ஒழிப்போம். குற்றவாளிகள் தப்பிப்பிழைக்க ஒருபோதும் இடமளியோம். அவர்களுக்கு அதியுட்ச தண்டனையை வழங்குவோம். இது உறுதி” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *