வெளிநாட்டவர்களைக் குறிவைக்கவில்லை புலிகள்! – மஹிந்த சுட்டிக்காட்டு

“நான் வாயால்வடை சுடும் அரசியல்வாதி அல்லன். முடியாது எனக் கூறப்பட்ட போரை முடித்துக்காட்டியவன்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சூளுரைத்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று ( 23) உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இது குறித்து மேலும் கூறியதாவது:-

“புலனாய்வுத்துறையினர் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது கவலையளிக்கின்றது. குறித்த அச்சுறுத்தல் குறித்து எனது பாதுகாப்பு அதிகாரிகள்கூட எனக்கு அறிவிக்கவில்லை. அவ்வாறு அறிவித்திருந்தால், நிச்சயம் நான் பேராயருக்கு அறிவிப்பு விடுத்திருப்பேன்.

எனது ஆட்சிக்காலத்தில் புலனாய்வுத்துறை பலப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், நல்லாட்சியின்கீழ் அதிகாரிகள் சிறையில் அடைக்கப்பட்டு, புலனாய்வுப்பிரிவு பலவீனப்படுத்தப்பட்டது. எமது ஆட்சியின்கீழ் பாதுகாப்பு துறை எவ்வாறு செயற்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.

மும்பைத் தாக்குதலைவிட இது பயங்கரமானது. உயிரிழப்புகள் அதிகம். புலிகள்கூட வெளிநாட்டவர்களை இலக்குவைக்கவில்லை. வெளிநாடுகளில் நிதி சேகரிக்கப்படுவதால் அதற்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அவர்கள் அதைச் செய்யவில்லை.

ஆனால், இந்த புதுவடிவிலான பயங்கரவாதம் அச்சுறுத்தல் மிக்கது. எனவே, அரசு கூடுதல் பொறுப்புடன் செயற்படவேண்டும். குறிப்பாக சம்பவத்துக்குப் பொறுப்பேற்று அரசு பதவி விலகவேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *