வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் நிலைமைகளை விளக்கிய ரணில்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்தித்து நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து விளக்கிக் கூறியுள்ளார். அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

சுமார் ஒரு மணிநேரம் நடந்த இந்தச் சந்திப்பில், நேற்றுமுன்தினம் நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் குறித்தும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் விளக்கிக் கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதல்களால் இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு ஏற்படக் கூடிய பாரிய இழப்புக் குறித்தும், அதனைச் சரி செய்வது குறித்தும் வெளிநாட்டுத் தூதுவர்களின் ஆலோசனைகளையும் பிரதமர் ரணில் கோரியுள்ளார்.

சந்தேகநபர்களை நீதிமன்ற உத்தரவின்றி விசாரிக்கவும், தடுத்து வைக்கவும் இராணுவம் மற்றும் பொலிஸுக்கு அதிகாரம் அளிக்கும், அவசரகாலச் சட்ட விதிகள் நேற்று நள்ளிரவில் இருந்து நடைமுறைக்குக் கொண்டு வரப்படவுள்ளது குறித்தும் இதன்போது, வெளிநாட்டுத் தூதுவர்களுக்குப் பிரதமர் தெரியப்படுத்தினார்.

தற்கொலைக் குண்டுதாரிகளுக்கு வெளிநாட்டுத் தொடர்புகள் இருப்பது நிரூபிக்கப்பட்டால், தீவிரவாதத்தை தோற்கடிப்பதற்கு வெளிநாட்டு உதவிகளைக் கோருவதற்கு தயங்கப் போவதில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

குண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட வெளிநாட்டவர்கள் பற்றிய தகவல்களையும், வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் பிரதமர் ரணில் பகிர்ந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *