தொடர் குண்டுவெடிப்புகள் குறித்து சர்வதேச உதவியுடன் உண்மையை உடன் கண்டறியுங்கள்! – அரசிடம் கூட்டமைப்பு கோரிக்கை

வடக்கு – கிழக்கில் உள்ள மக்களுக்கும், மதத் தலங்களுக்கும் போதிய பாதுகாப்பை ஏற்படுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் இடம்பெற்றிருக்கும் வன்முறைச் சம்பவங்கள் தொடரலாம் என்று கூறப்படும் நிலையில் உரிய பாதுகாப்புக்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரியுள்ளார்.

யாழ். மாவிட்டபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று திங்கட்கிழமை நடத்திய ஊடகவியியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்களை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியமை அவசியமானது. அத்தகைய விசாரணைகள் சர்வதேசத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு உண்மை கண்டறியப்பட வேண்டும் என இன, மத பேதமின்றிக் கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்வாறு ஒரு மோசமான குற்றச் செயல் நடக்கவிருப்பதாக இலங்கைத் தரப்புக்கு அறிவிக்கப்பட்டும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆகவே, அவ்வாறான தகவல் யாருக்கு வழங்கப்பட்டது? அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன அல்லது ஏன் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை? என்ற கேள்வியும் எழுகின்றது.

மோசமான குற்றச் செயல் நடைபெற்றிருக்கின்ற நிலையில் இலங்கைப் பாதுகாப்பு அல்லது புலனாய்வுத் துறையினர் என்ன செய்திருக்கின்றனர்? ஒரு சில விடயங்களை வைத்து பல்வேறு வகையில் விசாரணைகளைத் தொடரக் கூடிய அவர்களால் இத்தகைய மோசமான சம்பவங்கள் தொடர்பில் ஏன் கண்டறிய முடியாமல் போயிருக்கின்றது?

எனவே, இந்த விடயங்கள் தொடர்பில் உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

இது தொடர்பில் நாங்கள் நாடாளுமன்றத்திலும் பேசுவதற்குத் தீர்மானித்திருக்கின்றோம். எங்கள் கட்சிகளிடமும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் நாம் பேசியிருக்கின்றோம். ஆகவே, வன்முறைகளூடாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதால் அவர்களுக்காக நாங்கள் பேதங்களின்றி ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டியிருக்கின்றது.

இதேவேளை, வன்முறையாளர்களின் திட்டங்கள் இன்னும் முழுமை பெறாமல் தொடரவிருக்கின்றன எனக் கூறப்படும் நிலையில் வடக்கு, கிழக்கில் உள்ள மதத் தலங்கள் மற்றும் மக்களுக்குப் போதிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று நாங்கள் அரசிடம் கோருகின்றோம். அத்தோடு இதற்கான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநரிடமும் நாம் கேட்டு நிற்கின்றோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *