நியூசிலாந்து பள்ளிவாசல் மீதான தாக்குதலுக்குப் பதிலடியே இலங்கையில்!

“நியூசிலாந்தில் பள்ளிவாசல்களுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே ஈஸ்டர் அன்று இலங்கையில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து விசாரணை இடம்பெற்று வருகின்றது.”

– இவ்வாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று பிற்பகல் உரையாற்றிய அவர், இது குறித்து மேலும் கூறியவை வருமாறு:-

“இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பொன்றால் திட்டமிட்ட அடிப்படையிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தற்போது பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டிலுள்ள அடிப்படைவாத அமைப்புகளைத் தடைசெய்து, அவற்றின் சொத்துகளை முடக்க வேண்டும். அப்போதுதான் தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

அடிப்படைவாதக் குழுக்களின் செயலினால் இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களை சந்தேகத்துடன் பார்ப்பதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்” – என்றார்.

அதேவேளை, “இலங்கையிலுள்ள சிலர் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்று வந்துள்ளனர் என அன்றே நான் எச்சரிக்கை விடுத்தேன். ஆனால், என்னைச் சபித்தார்கள். இன்று என்ன நடந்துள்ளது?” என்று விஜயதாச ராஜபக்ச எம்.பி. கேள்வி எழுப்பினார்.

நாட்டில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்காக சபையில் இன்று இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *