பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்குங்கள்! ஜம்இய்யத்துல் உலமா கோரிக்கை

தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட அனைத்து சகோதரர்களின் துயரங்களிலும் பங்கெடுத்து, தம்மாலான அனைத்து உதவிகளையும் செய்யத் தேவையான நடவடிக்கைகளை அனைத்து மஸ்ஜிதுகளிலும் உடனடியாக முன்னெடுக்குமாறு, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.

அந்தவகையில், பின்வரும் நடவடிக்கைகளில் உடனடியாக களம் இறங்குமாறும் ஜம்இய்யத்துல் உலமா, சகல முஸ்லிம்களிடமும் கேட்டுக் கொள்கின்றது.

1.குறித்த தீவிரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு, தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு பாதுகாப்புப் பிரிவினருக்கு அனைத்து முஸ்லிம்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

2. இத்தாக்குதலுக்குட்பட்ட பகுதிகளில் செல்வாக்குள்ள மதத்தலைவர், மற்றும் முக்கியஸ்தர்களுடன் இணைந்து தாக்குதல் நடைபெற்ற இடங்களுக்குச் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறுங்கள்.

3.உடலாலும் பொருளாலும் அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு முன்வாருங்கள்.

4.பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஒவ்வொரு மஸ்ஜிதுகளிலும் பணம் சேகரிக்க முன்வர வேண்டும்.

5.பாதிக்கப்பட்ட சகோதரர்கள் மன வேதனையால் அல்லலுறும் இச்சந்தர்ப்பத்தில், அவர்களுடன் நிதானமாகவும் பொறுமையுடனும் நடந்துகொள்ள முன்வர வேண்டும்,

6. நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் பதாகைகளை சிங்கள, தமிழ் மொழி மூலம் சகல மஸ்ஜித்களிலும் காட்சிப்படுத்த வேண்டும். அத்துடன், வெள்ளை நிறக்கொடிகளையும் பறக்கவிடல் வேண்டும்,

7.எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை கிறிஸ்துவ சகோதரர்களின் ஆராதனைகளின் போது அவ்வளாகத்துக்குச் சமூகமளித்து, குறித்த தாக்குதலுக்கு நாம் எதிரானவர்கள் என்பதைத் தெரிவித்து, அவர்களுக்கு ஆறுதல் வழங்கும் வகையில் முடிந்தளவு அவ்விடங்களுக்கு சமூகமளித்தல் வேண்டும் என்று, அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவின் பிரசாரக் குழுச் செயலாளர் அஷ்ஷெய்க் எச். உமர்தீன், அனைத்து முஸ்லிம்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

( ஐ. ஏ. காதிர் கான் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *