இலங்கைக்காகக் களமிறங்கியது இன்டர்போல்! – விசாரணைகளுக்கு இந்தியா, அமெரிக்காவும் உதவி

நாட்டில் நேற்று நடந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியில் வெளிநாட்டு அமைப்புகளும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

உள்ளூர் அடிப்படைவாத அமைப்பு ஒன்றே நேற்று குண்டுவெடிப்புகளை நடத்தியிருப்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்த அமைப்புக்கு வெளிநாட்டு அமைப்புகளின் உதவிகள் கிடைத்திருப்பதாகவும் புலனாய்வுத் தகவல்களின் மூலம் அறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் விசாரணைகளுக்கு வெளிநாடுகளின் உதவிகளைக் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய வெளிநாட்டு தூதுவர்களைச் சந்திக்கவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிநாடுகளின் உதவிகளைக் கோரவுள்ளார்.

குண்டுவெடிப்புகள் தொடர்பான விசாரணைக்கு உதவ அமெரிக்காவும், சர்வதேச பொலிஸாரும் உதவ முன்வந்துள்ளன.

அமெரிக்க புலனாய்வு அமைப்பான, சிஐடி( மத்திய புலனாய்வுப் பிரிவு) மற்றும் அனைத்துலக காவல்துறை அதிகாரிகள் குழு என்பன விரைவில் இலங்கை வரவுள்ளது என பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். நேற்றைய குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்காக இந்தியப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கு இலங்கைக்கு இந்தியா உதவத் தயாராக இருப்பதாகவும், இந்தியப் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *