6 இடங்களில் தற்கொலைக் குண்டுதாரிகளே தாக்குதல்!

தற்காலிகமாக இழுத்து மூடப்பட்டன பிரபல ஹோட்டல்கள்

நாட்டில் நேற்று 8 இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 3 பிரபல ஹோட்டல்கள் உட்பட 6 இடங்களில் தற்கொலைக் குண்டுதாரிகளே தாக்குதல் நடத்தினர் என்பது உறுதியாகியுள்ளது.

இதையடுத்துயடுத்து கொழும்பில் உள்ள பல நட்சத்திரக் ஹோட்டல்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

கொழும்பு நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கிங்ஸ்பெரி, சினமன் கிராண்ட், ஷங்ரி-லா ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் நேற்று குண்டுகள் வெடித்திருந்தன.

இந்தக் குண்டுவெடிப்புகளால் மேற்படி ஹோட்டல்களுக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டதுடன், உள்நாட்டவர்களும் வெளிநாட்டவர்களும் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து கொழும்பு நகரில் உள்ள பல பிரபல ஹோட்டல்கள் தற்காலிகமாக மூடப்பட்டன.

பெரும்பாலான ஹோட்டல்களின் முன்பாக ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை, புதிய விருந்தினர்களை ஹோட்டல்களை அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்திருப்பதாக தற்காலிகமாக மூடப்பட்ட ஹோட்டல்களின் முகாமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

3 ஹோட்டல்களிலும் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகள் தற்கொலைக் குண்டுதாரிகளால் மேற்கொள்ளப்பட்டன என்றும், குண்டுதாரிகள் அந்த ஹோட்டல்களில் தங்கியிருந்துள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளதை அடுத்தே, இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் குண்டுகள் வெடித்த 3 ஹோட்டல்களிலும் ஒரு பெயருடைய நபரே, அறைகளை வாடகைக்கு பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

அவர் ஒரே பெயரில், ஒரே அடையாள அட்டையைப் பயன்படுத்தியே ஹோட்டல்களில் தங்குவதற்கு அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

முகமட் அஸ்ஸம் முகமட் என்பவரே அறையைப் பதிவு செய்துள்ளமை விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

சினமன் கிராண்ட் ஹோட்டலில் நேற்றுக் காலை உணவு வேளையில் வரிசையில் நின்றபோதே, குண்டுதாரி குண்டை வெடிக்க வைத்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

கோப்பையுடன் வந்த அந்த நபருக்கு உணவு பரிமாறப்படும்போதே அந்த நபர் வெடித்துச் சிதறினார்.

அந்த நபரின் உடல் துண்டு துண்டாகக் கிடந்த நிலையில், பொலிஸார் எடுத்துச் சென்றனர் என்று ஹோட்டல் அதிகாரி ஒருவர் ஏ.எவ்.பியிடம் தெரிவித்துள்ளார்.

நேற்று வெடித்த குண்டுகளில் 6 இடங்களில் தற்கொலைக் குண்டுதாரிகளே தாக்குதல் நடத்தினர் என்று அரச பகுப்பாய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், ஷங்கிரிலா ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், கிங்ஸ்​பெரி ஹோட்டல், நீர்கொழும்பு புனித செபஸ்ரியன் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் ஆகியவற்றில் தற்கொலைக் குண்டுதாரிகளே குண்டுகளை வெடிக்க வைத்துள்ளனர் என்று அவர் உறுதி செய்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *