160 இற்கும் மேற்பட்டோர் பலி; 500 பேர் படுகாயம்!! – பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது இலங்கை

இலங்கையில் இன்று 6 இடங்களில் பாரிய குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தச் சம்பவங்களில் 160 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அத்துடன், 500 இற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கொழும்பிலுள்ள கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், ஷங்கிரிலா ஹோட்டல், சினமன் கிராண்ட் ஹோட்டல், கிங்ஸ்​பெரி ஹோட்டல் ஆகியவற்றிலும், நீர்கொழும்பு கட்டுவபிட்டி புனித செபஸ்ரியன் தேவாலயத்திலும், மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திலும் இந்தக் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

நாட்டில் இன்று காலை 8.45 இற்கும் 9.15 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளில் இந்த 6 குண்டு வெடிப்புச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணகேசர தெரிவித்தார்.

நீர்கொழும்பு கட்டுவபிட்டி புனித செபஸ்ரியன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 90 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் எனவும், அவர்களில் 65 பேரின் சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளனர் எனவும், மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 27 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர் எனவும், கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பலர் பலியாகியுள்ளனர் எனவும், அவர்களில் 40 பேரின் சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன எனவும், கொழும்பில் மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் கூறினார்.

இந்தச் சம்பவங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் நான்கு இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புகளில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இடபற்றாக்குறை காரணமாக பலர் களுபோவில வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்படுகின்றனர்.

சம்பவங்கள் இடம்பெற்ற 6 பகுதிகளிலும் முப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் துயரச் சம்பவங்களினால் முழு நாடே இன்று பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *