போர்க்குற்றவாளியான கோட்டாவை களமிறக்க ஒருபோதும் இடமளியோம்! – குமார வெல்கம திட்டவட்டம்

“கோட்டாபய ராஜபக்‌ஷவை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் என்று கூறுவதற்கு வெட்கப்படுகின்றோம். அவர் ஒரு போர்க்குற்றவாளி. உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இப்படியான அவரை ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்க மஹிந்த ராஜபக்‌ஷ விரும்பமாட்டார். நாமும் அவர் வேட்பாளராகக் களமிறங்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.”

– இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் நெருங்கிய சகாவான – ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ‘காலைக்கதிர்’ பத்திரிகைக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“இரத்த உடை அணிந்துள்ள ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க முடியாது. தேசிய உடை அணிந்த வெற்றி பெறக்கூடிய ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைய கோட்டாபய ராஜபக்‌ஷவே பிரதான காரணம். எனவே, எனது நண்பர் மஹிந்தவின் தோல்விக்குக் காரணமாக இருந்தவரை வேட்பாளராக எப்படிக் களமிறக்க முடியும்?

தமிழ், முஸ்லிம் மக்களின் கண்களில் கோட்டாபயவைக் காட்டவே கூடாது. அவர் மீது அப்படிக் கோபத்தில் அம்மக்கள் இருக்கின்றார்கள். அந்த மக்களைக் கடத்திப் படுகொலை செய்தமை மட்டுமன்றி அவர்களின் சொத்துக்களையும் கோட்டாபய அழித்துள்ளார். மஹிந்தவின் ஆட்சியில் முஸ்லிம் மக்களின் பள்ளிவாசல்கள் மர்மக் குழுவினரால் தாக்கப்படுவதற்கு கோட்டாபய ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.

சிங்கள மக்கள் மத்தியிலும் கோட்டாபயவுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளன.

ராஜபக்‌ஷ குடும்பத்தில் நல்லவர்கள் உள்ளனர். ஆனால், கோட்டாபய மாதிரி ஒரு தீயவர் அந்தக் குடும்பத்தில் இருப்பதால் அந்தக் குடும்பத்துக்கு எதிராக ஒரு கறுத்தப்புள்ளி குத்தப்பட்டுள்ளது. இதை மஹிந்த ராஜபக்‌ஷ களைந்தெடுக்க வேண்டும். நல்லதொரு வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்க வேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *