யானைக்கு வாக்களிக்காததால் விரலை வெட்டிக்கொண்ட இளைஞன்!

தவறுதலாக பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்துவிட்டதால் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் தனது விரலை வெட்டிக்கொண்டார்.

இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

நேற்று, வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு, தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 95 தொகுதிகளில் நடைபெற்றது.

அவற்றில் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த எட்டு மக்களவைத் தொகுதிகளும் அடக்கம்.

அந்த மாநிலத்தில் உள்ள புலந்த்சஹர் மக்களவைத் தொகுதியைச் சேர்ந்த பவன் குமார் எனும்

தலித் இளைஞர் தவறுதலாக பாஜகவுக்கு வாக்களித்து விட்டதால், மை தடவப்பட்ட இடது கை ஆள்காட்டி வெட்டிக்கொண்டுள்ளார்.

தாம் பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னத்துக்கு வாக்களிக்க விரும்பியதாகவும், தவறுதலாக பாஜகவின் தாமரை சின்னத்துக்கு வாக்களித்து விட்டதாகவும் அவர் காணொளிப்பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வெட்டப்பட்ட விரலைச் சுற்றி கட்டுபோடப்பட்டிருக்கும் அந்தக் காணொளி சமூக ஊடகங்களில் பிரபலமடைந்து வருகிறது.

உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி, முலாயம் சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய லோக் தலம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துத் தேர்தலை எதிர்கொள்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *