யாழில் மின்னல் தாக்கி மூவர் பரிதாப மரணம்! – மழையை எதிர்பார்த்த மக்களுக்குப் பெரும் சோகம்

யாழ்ப்பாணம், உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட குப்பிளான் தெற்குப் பகுதியில் மின்னல் தாக்கியதில் மூவர் பலியாகியுள்ளனர்.
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் கனமழையின்போது ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினாலேயே மூவரும் உயிரிழந்துள்ளனர்.
புகையிலைத் தோட்டம் ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த இரு பெண்களும், ஒரு ஆணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் இருவர் சகோதரர்களாவர். ஏழாலை தெற்கு, மயிலங்காடு ஞானவைரவர் வீதியில் வசிக்குமு் திருநாவுக்கரசு கண்ணன் (வயது – 48), அவரது சகோதரியான திருமதி கந்தசாமி மைனாவதி (வயது – 53), அவர்களது உறவினரான திருமதி ரவிக்குமார் சுதா (வயது – 42) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
வடக்கில் கடும் வெப்பத்துடனான காலநிலை கடந்த சில மாதங்களாக நிலவிவரும் நிலையில் இன்று யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது. யாழ்ப்பாணம், குப்பிளான் – மயிலக்காட்டிலும் இன்று மழை பெய்திருந்தது.
அங்குள்ள புகையிலைத் தோட்டம் ஒன்றில் அந்தச் சமயம் 4 பேர் வேலை செய்து கொண்டிருந்துள்ளனர். மழை பெய்ய ஆரம்பித்ததும் அவர்களில் ஒருவர் உணவு எடுத்துச் செல்லச் சென்றுவிட ஏனைய மூவரும் அங்குள்ள தென்னை மரத்துக்குக் கீழே இருந்த கொட்டகை ஒன்றுக்குள் ஒதுங்கி இருந்துள்ளனர்.
 
அப்போது அந்தத் தென்னை மரத்தில் மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மரத்தின் கீழ் கொட்டகையில் இருந்தவர்கள் மின்னல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுத் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
மதிய உணவை எடுத்துத் திரும்பிய பெண், கொட்டகையில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து நிலைகுலைந்துள்ளார். அவர் சுதாரித்து அயலவர்களுக்குத் தெரிவித்த பின்னரே இந்தச் சம்பவம் ஏனையோருக்குத் தெரியவந்துள்ளது.
உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்களை அயலவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தி​யசாலைக்குக் கொண்டு சென்றனர். எனினும், மூவரும் முன்னரே உயிரிழந்து விட்டனர் என்று வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடும் வெப்பத்துடனான காலநிலையால் மழையை எதிர்பார்த்திருந்த யாழ்.குடாநாட்டு மக்களுக்கு இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *