நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க கூட்டமைப்பும் களத்தில் குதிப்பு!

 

20ஐ ஆதரிக்குமாறு அனைத்துக் கட்சிகளிடமும் கோரிக்கை

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை முற்றாக இல்லாதொழிக்கக் கோரும் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என்ற கோரிக்கை மேலோங்கியுள்ளதால் ஜனாதிபதித் தேர்தல் அவசியமில்லை” என்று ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ‘புதுச்சுடர்’ வார இதழிடம் தெரிவித்தார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து நாடாளுமன்ற ஆட்சி முறைமையை ஏற்படுத்தும் நோக்கில் ஜே.வி.பியால் 20ஆவது திருத்தச் சட்டமூலம் சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் கொள்கை அளவில் ஆதரவு தெரிவித்துள்ளது.

இந்நிலையிலேயே ‘20’ ஐ நிறைவேற்றி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு சமாதி கட்டும் முயற்சியில் மேற்படி இரு கட்சிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கரம் கோர்த்துள்ளது.

தெற்கு அரசியலில் தற்போது ஜனாதிபதித் தேர்தல் குறித்தே அதிகம் பேசப்பட்டு வருகின்றது. தாம் தேர்தலை எதிர்கொள்ளத் தயார் என சில கட்சிகள் பகிரங்கமாகவே அறிவித்துள்ளன.

எனவே, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்னவென்று அதன் பேச்சாளர் சுமந்திரன் எம்.பியிடம் வினவினோம்.

இதற்குப் பதிலளித்த அவர் கூறியவை வருமாறு:-

“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் என வாக்குறுதி வழங்கிவிட்டே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன களமிறங்கினார்.

அரசமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக சில அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டாலும் முழுமையாக அது நீக்கப்படவில்லை.

தற்போதுள்ள ஜனாதிபதி முறைமையானது ஜனநாயகத்துக்குப் பாரிய அச்சுறுத்தலாகும். ஆட்சிக் கவிழ்ப்பு சூழ்ச்சியின்போது அதை வெளிப்படையாகக் கண்டோம். எனவே, ஜனநாயகத்தை விரும்பும் – குரல் கொடுக்கும் அனைவரும் இந்த விடயத்தில் ஓரணியில் திரள வேண்டும்.

ஜே.வி.பியால் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவளிக்கப்படும் என நாம் அறிவித்துள்ளோம். இந்தச் சட்டமூலம் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும். இது நிறைவேற்றப்பட்டால் ஜனாதிபதித் தேர்தல் தேவைப்படாது.

இது தொடர்பில் ஜே.வி.பியுடனும் சிவில் அமைப்புகளுடனும் நாம் பேச்சு நடத்தியுள்ளோம். இந்தப் பேச்சு ஏனைய தரப்புகளுடனும் தொடரும்” – என்றார்.

(‘புதுச்சுடர்’ வார இதழ் – 2019 ஏப்ரல் 13 – 26)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *