தேசிய இலக்குகளை அடைய ஒன்றிணைந்து பயணிப்போம்! – புத்தாண்டு வாழ்த்தில் மைத்திரி தெரிவிப்பு

“தேசிய இலக்குகளை அடைவதற்கு இந்தப் புத்தாண்டில் ஒருமித்த இலட்சியத்துடன் நாம் ஒன்றிணைவோம்.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள தமிழ் – சிங்களப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“ஜீவராசிகளின் இருப்பை உறுதிப்படுத்துபவையாக விளங்கும் சூரியனையும் சந்திரனையும் பண்டுதொட்டு மக்கள் மிகுந்த பக்தி சிரத்தையோடு வழிபட்டு வருகின்றனர். இயற்கையைத் தெய்வீகமாக மதித்தல் சாதாரண குடிமக்களதும் அரசனதும் வழக்கமாக இருக்கிறது. சூரியனையும் சந்திரனையும் வழிபடுவதற்காகப் புத்தாண்டுக் காலத்தில் ஒன்றுகூடும் தமிழ் – சிங்கள மக்கள் சூரியன் மீன ராசியிலிருந்து மேட ராசிக்குப் பிரவேசிப்பதைப் புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

சூரிய சங்கிராந்தியுடன் ஆரம்பமாகும் சித்திரைப் புத்தாண்டானது மனிதன் தனது சுற்றுச்சூழலையும் இயற்கையையும் வழிபடுவதற்கான வாய்ப்பாக அமைகின்றது.

இயற்கை புத்தெழுச்சி பெறுவதனாலேயே நாம் இதைப் புத்தாண்டாக கொண்டாடி மகிழ்கின்றோம்.

சித்திரைப் புத்தாண்டெனும் உயரிய கலாசாரப் பண்டிகையானது, சந்தைப் பொருளாதார கோட்பாடுகளின் தாக்கங்களுக்கு உள்ளாகியிருக்கும் இந்தக் காலத்தில் அதைக் கடந்து இந்தப் பண்டிகையின் உள்ளார்ந்தப் பண்புகளைப் புரிந்துகொள்ள முயற்சித்தல் அவசியமாகின்றது.

இயற்கையின் குழந்தைகளாகிய நாமே இயற்கையை நமக்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாகக் கருதி அதற்கு இடையூறு செய்திருக்கின்றோம். ஆகையால் ஏற்பட்டிருக்கும் பாதகங்களை உணர்ந்து இயற்கையுடன் கலந்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர வேண்டிய ஒரு கட்டத்திலேயே நாம் அடியெடுத்து வைத்திருக்கின்றோம்.

இதுவரை நாம் அடைந்திருக்கும் வெற்றியின் பலன்களை அனுபவிப்பதோடு தேசிய இலக்குகளை அடைவதற்கு நாம் இந்தப் புத்தாண்டில் ஒருமித்த இலட்சியத்துடன் ஒன்றிணைவோம் என உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் அதேவேளை, இந்தச் சித்திரைப் புத்தாண்டைக் கோலாகலமாகக் கொண்டாடும் நாட்டு மக்களுக்கும் புலம் பெயர்ந்து வாழும் அனைத்து இலங்கையர்களுக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டுக்கான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *