கோட்டாவுக்கு எதிரான அஸ்திரமாக பொன்சேகா! ரணில் வியூகம் வகுப்பு!!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் போர் தொடுக்க தயாராகிவருகின்றது.

கோட்டாபய ராஜபக்சவை கடுமையாக விமர்சித்துவரும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகாவை வைத்தே இதற்கான வியூகத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வகுக்கவுள்ளார் என அரசியல் களத்தில் பரவலாக பேசப்படுகின்றது.

உள்நாட்டு விவகார அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிப்பதற்கு, ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

குடிவரவு, குடியகழ்வு திணைக்களம் இந்த அமைச்சின் கட்டுப்பாட்டின்கீழேயே உள்ளது. எனவே, குடியுரிமை வழங்குதல், இரட்டைக் குடியுரிமை வழங்குதல் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் பொறுப்பு இந்த அமைச்சுக்கே இருக்கிறது.

கோட்டாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு விட்டு, இலங்கை குடியுரிமையை பெற்றால் தான்,  ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும்.

அமெரிக்க குடியுரிமையைக் கைவிட விண்ணப்பித்துள்ள கோட்டாபய , அடுத்து இலங்கை குடியுரிமையை மாத்திரம் கொண்டுள்ளார் என்பதை, உள்நாட்டு விவகார அமைச்சின் மூலம் உறுதி செய்ய வேண்டும்.

இந்த நிலையிலேயே, உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

இதனால், போட்டாபய ராஜபக்சவின் குடியுரிமை விவகாரத்தில் சரத் பொன்சேகா தலையீடு செய்யவோ, செல்வாக்குச் செலுத்தவோ வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.

சரத் பொன்சேக்கா உட்பட ஆறு பேருக்கு அமைச்சுப் பதவி வழங்குமாறு சிபாரிசு பட்டியலை ஜனாதிபதிக்கு ஐக்கிய தேசியக்கட்சி அனுப்பி வைக்கவுள்ளது. எனினும், ஜனாதிபதி விரும்பாத பட்சத்தில் பொன்சேகாவுக்கு அமைச்சுப் பதவியை வழங்க முடியாத சூழ்நிலையும் ஏற்படும்.

இதற்கு முன்னரும் பொன்சேகாவின் பெயரை ஜனாதிபதி நிராகரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *