தமிழருக்குத் தீர்வை வழங்கியே தீருவோம்! – ஐ.தே.க. உறுதி

“கொடூர போரால் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் மக்கள். அவர்களுக்கு அரசியல் தீர்வை வழங்கும் பொறுப்பு எம்மிடம் உண்டு. இதை நாம் செய்தே ஆக வேண்டும். இல்லையெனில் தமிழ் மக்கள் எம்மை வெறுத்து விடுவார்கள்.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்து வருகின்றது. ஆனால், அக்கட்சியால் அரசியல் தீர்வு முன்வைக்கப்படாது என பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், அரசியல் தீர்வுத் திட்டம் குறித்து தமிழ் ஊடகமொன்றால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சஜித் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளனர். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு ஏகோபித்த ஆதரவை வழங்குவதை நாம் மறக்க முடியாது. தமிழ் மக்களின் நலன் கருதியே அவர்கள் எமக்கு ஆதரவு வழங்குகின்றமை உண்மை.

‘2018 ஒக்டோபர் 26’ அரசியல் சூழ்ச்சி தொடக்கம் ‘2019 வரவு – செலவுத் திட்டம்’ வரை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு பேராதரவை வழங்கினார்கள். ‘அரசியல் சதி முயற்சி’யின்போது கூட்டமைப்பினரும் எம்முடன் கைகோர்த்து இருந்தபடியால்தான் அதை முறியடிக்கக் கூடியதாக இருந்தது.

எனவே, கூட்டமைப்பினரும் தமிழ் மக்களும் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வை நாம் வழங்கியே தீருவோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *