43 இடங்களில் இராணுவத்தினருக்கு காணி சுவீகரிப்பது இடைநிறுத்தம்! – யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்

யாழ். குடாநாட்டில் 43 இடங்களில் இராணுவம் மற்றும் கடற்படையினரின் தேவைக்குக் காணி சுவீகரிப்புச் செய்யும் நடவடிக்கையை இடைநிறுத்தும் தீர்மானம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் இணைத் தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

யாழ். குடாநாட்டில் இராணுவம், கடற்படை மற்றும் பொலிஸாருக்கு என 43 இடங்களில் தெரிவுசெய்யப்பட்ட காணிகளை நில அளவை செய்து அவற்றைச் சுவீகரிப்பதற்கான கடிதங்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட நில அளவை திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பட்டியலை முன்வைத்தார்.

அந்தப் பட்டியல் தொடர்பில் ஆராய்ந்து அந்தக் காணிகளின் தேவை தொடர்பில் பிரதேச செயலாளர்களை அறிக்கை சமர்ப்பிக்குமாறு இணைத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரினார். அதனால் சுவீகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் வரை சுவீகரிப்புப் பணிகளை இடைநிறுத்துவது எனத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் யாழ்.மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், திணைக்கள உயர் அதிகாரிகள், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன், யாழ்.மாநகர முதல்வர் இ.ஆனோல்ட், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது கல்வி, சுகாதாரம், மீள்குடியேற்றம் மற்றும் வீதி புனரமைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *