நள்ளிரவுவேளை சீனர்களை சந்திக்கும் பழக்கம் இல்லை! – முன்னணியுடன் விக்கி ‘லடாய்’

நள்ளிரவில் சென்று சீனர்களைச் சந்திக்கும் பழக்கம் எனக்கு இல்லை என்று தமிழ் மக்கள் கூட்டமைப்பின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

கலப்பு நீதிமன்றப் பொறிமுறையின் கீழ் போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளைச் செய்லாம் என்று வடக்கு மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தெரிவித்து வந்த விக்னேஸ்வரன். அண்மையில் அந்த விசாரணையை முன்னாள் இந்திய பிரதம நீதியரசர் பகவதி தலைமையில் மேற்கொள்ளலாம் என்ற ஆலோசனையையும் வழங்கியிருந்தார். அவருடைய அந்தக் கருத்தை அரசியல்வாதிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

கடந்த திங்கட்கிழமை அது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் மணிவண்ணன் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது, கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை விக்னேஸ்வரன் தொடர்ந்தும் வலியுறுத்தினால், அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம் என்று தெரிவித்திருந்தார்.
இந்த விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுந்திரனுக்கும், தமிழ் மக்கள் கூட்டமைப்பின் தலைவர் விக்னேஸ்வரனுக்கும் வித்தியாசம் இல்லை என்றும் மணிவண்ணன் கடுமையாகச் சாடியிருந்தார்.

விக்னேஸ்வரனைப் பற்றி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்வைத்த விமர்சனம் தொடர்பில் அவரிடம் ‘உதயன்’ பத்திரிகை கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

மணிவண்ணனுடைய அவ்வாறானதொரு பேச்சை தான் அறியவில்லை என்று தெரிவித்த விக்னேஸ்வரன், “என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அதில் அம்பலத்துக்கு வராத அந்தரங்கங்கள் இருந்தால் அவற்றை அறிய நானும் ஆவலாய் இருக்கின்றேன். நள்ளிரவில் சீனர்களைப் போய்ச் சந்திக்கும் பழக்கம் எனக்கு இல்லை” என்றும் பதிலளித்தார்.

தமிழ் அரசியல் பரப்பிலுள்ள ஒவ்வொரு பிரமுகர்களையும், ஒவ்வொரு நாட்டுடன் தொடர்புபடுத்திக் குற்றச்சாட்டு சுமத்துவதையும், அந்த நாடுகளின் கைப்பிள்ளைகளாக இயங்குவதாக குறிப்பிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சில வாரங்களின் முன்னர் யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்ட சீனத் தூதர் தலைமையிலான குழுவில் அங்கம் வகித்த, அரசியல் விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளை நேரில் இரகசியமாகச் சந்தித்துப் பேசியுள்ளனர் என்று இணையத் தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *