பாகிஸ்தான்மீது இந்தியா மீண்டும் தாக்குதல்! திகதி விபரம் வெளியானதால் பரபரப்பு!!

தங்கள் மீது இந்தியா இந்த மாதம் மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று உளவுத்துறையின் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி கூறியுள்ளார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்தியா, பாகிஸ்தான் அமைச்சர் கூறியுள்ளது பொறுப்பற்ற மற்றும் அபத்தமான கருத்துகள் என்று கூறியுள்ளது.

எல்லைதாண்டி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவங்ளால் பிப்ரவரி மாதம் இரு நாடுகளுக்கும் இடையே உண்டான பதற்றம் தணிந்து வருவதாகத் தோன்றி வரும் சூழலில், இன்று, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஷா மஹ்மூத் குரேஷி இதைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தாக்குதல் ஏப்ரல் 16 முதல் 20 வரையிலான காலகட்டத்தில் நடக்க வாய்ப்புண்டு என்றும் தங்கள் கவலைகளை ஐ.நா பாதுகாப்பு அவையின் ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளிடம் பகிர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் பாகிஸ்தானிடம் என்ன ஆதாரம் உள்ளது, எந்த நேரத்தில் இந்தியா தாக்குதல் நடத்தும் போன்ற தகவல்களை அவர் தெரிவிக்கவில்லை.

‘பொறுப்பற்ற மற்றும் அபத்தமான கருத்துகள்’

இந்தப் பிராந்தியத்தில் போர் பீதியை உண்டாக்கும் நோக்கத்துடன் கூறப்பட்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் பொறுப்பற்ற மற்றும் அபத்தமான கருத்துகளை மறுப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து இயங்கும் தீவிரவாத அமைப்புகளை இந்தியா மீது தாக்குதல் நடத்தத் தூண்டவே பொது வெளியில் பாகிஸ்தான் இவ்வாறு பேசுகிறது என்று இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள மறுப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்தியா மீது நடத்தப்படும் எல்லை தாண்டிய பயங்கரவாதத் தாக்குதல்களில் தமக்கு இருக்கும் பொறுப்பில் இருந்து பாகிஸ்தான் தம்மைத் தாமே விடுவித்துக்கொள்ள முடியாது. தமது சொந்த மண்ணில் நடக்கும் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக நம்பகத்தன்மை மிக்க மற்றும் மாற்ற முடியாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களுக்கு எதிராக தீர்க்கமான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *