நாங்கள் நினைத்தால் அரசைக் கவிழ்ப்போம்! – எச்சரிக்கின்றார் சம்பந்தன்

“ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு தனித்து இயங்கக்கூடிய பலம் இல்லை. நாடாளுமன்றத்தில் 113 பேர் கூட ரணில் அரசுக்கு இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேராதரவுடன்தான் இந்த அரசு இயங்குகின்றது. எமது ஆதரவுடன்தான் 119 வாக்குகளுடன் வரவு – செலவுத் திட்டம் நிறைவேறியது. நாங்கள் நினைத்தால் இந்த அரசை எந்நேரத்திலும் கவிழ்ப்போம். அதனால் தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளை அனுபவிக்க இந்த அரசு இடமளிக்க வேண்டும்.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

அவர் மேலும் கூறியதாவது:-

“நாங்கள் அரசைப் பாதுகாத்து வருகின்றோம் என்று வெளியில் சிலர் விஷமத்தனமான பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். உண்மையில், அரசைப் பாதுகாப்பது எமது நோக்கம் அல்ல. தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கவும், நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வைக் காணும் வகையிலும்தான் இந்த அரசுக்கு நாம் ஆதரவு வழங்கி வருகின்றோம்.

இதை அரசுடன் நாம் நடத்தும் பேச்சுகளின்போது தெளிவாகக் கூறியுள்ளோம். அதை உணர்ந்து அரசு செயற்பட வேண்டும். இல்லையேல், அரசுக்கான எமது ஆதரவை விலக்கிக்கொள்வோம். அப்போது அரசு கவிழ்ந்தே தீரும்.

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தபோதிலும், தற்போது அந்தப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அந்தப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறு அரசிடம் நாம் வலியுறுத்தியுள்ளோம்.

ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளையும் முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு அரசிடம் நாம் கோரியுள்ளோம். ஐ.நா. ஊடாக அரசுக்கு அழுத்தம் வழங்கி வருகின்றோம். ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை இலங்கை அரசு உதாசீனம் செய்தால் அதன் விளைவு மிகவும் பாரதூரமானதாக – மோசமானதாக இருக்கும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *