தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்

கல்முனையில் தனியார் பஸ் உரிமையாளர்கள்  இன்று (5) காலை முதல் வேலை நிறுத்தமொன்றை மேற்கொண்டுள்ளனர்.

தங்களுக்கான உரிய இட ஒடுக்கிடு வழங்கப்பட வேண்டும் என்று வேண்டியே மேற்படி இவ் வேலை நிறுத்தம் இடம்பெற்று வருவதாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
இன்று காலை தனியார் மற்றும் இ.போ.சபை போக்குவரத்து ஊழியர்களுக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டது. இதில் இ.போ.சபை ஊழியர்கள் இருவர் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக இருவர் சந்தேகத்தின் பேரில் கல்முனை  பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக போக்குவரத்து கேந்திர மத்திய தளமான கல்முனையில் பயணிகள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டு வருவதுடன், அவசர வேலைகள் நிமிர்ந்தம் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் பெரும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதே வேளை, கடந்த வாரமளவில் கல்முனையில் அரச, தனியார் பஸ் தரப்பினரிடையே முரண்பாடு ஏற்பட்டு அது கல்முனை மாநகர
முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். ரக் கீபின்  தலையீட்டினால் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில்,  உரிய இட ஒதுக்கீடு வழங்கக்கோரி இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
கடந்த வாரம் கல்முனை பிரதான பஸ் நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களையும் தனியார் பஸ்களையும் தரித்து வைப்பதில் இரு தரப்பினரிடையேயும் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டிருந்ததுடன் பஸ்கள் எவையும் சேவையில் ஈடுமடாமல் முடக்கப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து இரு தரப்பு பிரதிநிதிகளையும் கல்முனை மாநகர சபைக்கு அழைத்த முதல்வர் ஏ.எம்.றகீப், ஆணையாளர் ஏ.எம்.அன்சார் அவர்களின் பங்கேற்புடன் அப்பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி, பிரச்சினைகளை ஆராய்ந்தார். இதன்போது முதல்வர் முன்வைத்த தீர்வினை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டு சுமூக நிலைக்கு திரும்ப இணக்கம் தெரிவித்தனர்.
இதன் பிரகாரம் குறித்த பஸ் நிலையத்தின் வடக்கு பகுதியை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களுக்கும் தென் பகுதியை தனியார் பஸ்களுக்கும் ஒதுக்குவதற்கும் அதனை சரியாக எல்லையிடுவதற்கும் இனிவரும் காலங்களில் எவரும் எல்லையை அத்துமீறும் வகையில் பஸ்களை தரித்து வைப்பதில்லை என்றும் உடன்பாடு எட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பஸ் நிலையத்திற்கு நேரடியாக சென்ற முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்கள், இரு தரப்பினருக்குமான இட ஒதுக்கீட்டை தெளிவுபடுத்தியதுடன் அவரால் எல்லைக் கோடு வரையப்பட்டு, இரு பகுதிகளும் அடையாளபடுத்தப்பட்டன.
இவ்வாறு சுமுகமாக தீர்க்கப்பட்டிருந்த நிலையில் இன்று மீண்டும் போராட்டம் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதுடன் தற்போதும் அங்கு இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலையே காணப்படுகிறது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *