கல்முனை பஸ் நிலையத்தில் மோதல் – இருவர் பலத்த காயம்

கல்முனை பிரதான பஸ் நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களையும் தனியார் பஸ்களையும் தரித்து வைப்பதில் இரு தரப்பினரிடையேயும் ஏற்பட்ட முரண்பாடு பின்னர் (04) மாலை மோதலாக மாறியது இந்த மோதல் சம்பவத்தில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களான எஸ்.புஸ்பராஜா – நேரக் கணிப்பாளர் (வயது 49), கே.என்.ரத்நஸ்வரன் – உதவி முகாமையாளர் (வயது 51) இருவர் பலத்த காயங்களுடன் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனை அடுத்து சம்பவத்துடன் தொடர்பு பட்டவர்கள் எனும் சந்தேகத்தின் பெயரில் தனியார் பஸ் நடத்துனர்களான ரி.கிருபாகரன் சர்மா(வயது 24) , வி.ஜெயகுமார் (வயது 36) ஆகிய  இருவரும் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை உடன் விடுதலை செய்ய வேண்டும் மற்றும் தனியார் பஸ் வண்டிகளை நிறுத்துவதற்கு பஸ் தரிப்பிடத்தில் இடம் வழங்க வேண்டும் எனக் கோரியும் தனியார் பஸ் ஊழியர்கள்  (05) கல்முனை பஸ் தரிப்பிடத்துக்கு முன்னால் பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதனால் பொதுமக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர் நோக்கியதை காணக்கூடியதாக இருந்தது.

தனியார் பஸ் ஊழியர்கள் சேவையில் ஈடுபட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை முடக்க முற்பட்டபோது கல்முனை நகர் பொது போக்குவரத்து சிலமணி நேரம் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது

இதனையடுத்து ஸ்தலத்துக்கு வருகைதந்த பொலிஸார் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததை அடுத்து இலங்கை போக்குவரத்து பஸ் சேவை வழமைக்கு திரும்பியது.

இதேவேளை இரு தரப்பு பிரதிநிதிகளையும் கல்முனை மாநகர சபைக்கு கடந்த புதன் கிழமை (03) அழைத்த முதல்வர் ஏ.எம்.றகீப், ஆணையாளர் ஏ.எம்.அன்சார் அவர்களின் பங்கேற்புடன் அப்பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி, பிரச்சினைகளை ஆராய்ந்தார். இதன்போது முதல்வர் முன்வைத்த தீர்வினை இரு தரப்பினரும் ஏற்றுக்கொண்டு சுமூக நிலைக்கு திரும்ப இணக்கம் தெரிவித்தனர்.

இதன் பிரகாரம் குறித்த பஸ் நிலையத்தின் வடக்கு பகுதியை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களுக்கும் தென் பகுதியை தனியார் பஸ்களுக்கும் ஒதுக்குவதற்கும் அதனை சரியாக எல்லையிடுவதற்கும் இனிவரும் காலங்களில் எவரும் எல்லையை அத்துமீறும் வகையில் பஸ்களை தரித்து வைப்பதில்லை என்றும் உடன்பாடு எட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பஸ் நிலையத்திற்கு நேரடியாக சென்ற முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்கள், இரு தரப்பினருக்குமான இட ஒதுக்கீட்டை தெளிவுபடுத்தியதுடன் அவரால் எல்லைக் கோடு வரையப்பட்டு, இரு பகுதிகளும் அடையாளபடுத்தப்பட்டன. எனினும் தொடர்ந்து ஏற்பட்ட முறுகல் நிலை மேதலாக மாறியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *