அதிகாரப் பரவலாக்கத்தை முன்னெடுப்பது குறித்து மைத்திரியுடன் அடுத்த வாரம் சம்பந்தன் – சுமந்திரன் பேச்சு!

 

அதிகாரப் பரவலாக்கல் திட்டங்களை முன்னெடுப்பது குறித்து அடுத்த வாரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் அடுத்த வாரத்தில் சந்தித்து உரையாடுவர்.

நேற்று ஜனாதிபதிக்கும் சம்பந்தனுக்கும் இடையில் இடம்பெற்ற குறுகிய கலந்துரையாடலின்போது இது பற்றித் தீர்மானிக்கப்பட்டது.

இதுவரை நடைபெற்ற புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சிகளின்போது, அதிகாரப் பரவலாக்கல் விடயங்களில் பல்வேறு கட்சிகளிடையேயும் இணக்க நிலை காணப்பட்டது எனக் கூறப்படுகின்றது.

புதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி தாமதப்பட்டாலும், குறைந்த பட்சம் இணக்கம் காணப்பட்ட அதிகாரப் பரவலாக்கல் ஏற்பாடுகளையாவது அரசமைப்புத் திருத்தமாகவேனும் கொண்டுவரச் செய்வதற்கு வலியுறுத்தி ற்கின்றது கூட்டமைப்பு.

அந்தத் திட்டத்தின் அடிப்படையில், கட்சித் தலைவர் கூட்டம் ஒன்றை ஜனாதிபதி அழைத்து அந்தக் கூட்டத்தில் இவ்விடயம் குறித்து ஆராய்ந்தமையும் – அரசமைப்புத் திருத்தமாகக் கொண்டு வரப்படக்கூடிய அதிகாரப் பரவலாக்கல் விடயங்களைக் கண்டறிந்து பரிந்துரை செய்வதற்கு சுமந்திரன், ராஜித சேனாரத்ன, சரத் அமுனுகம, டிலான் பெரேரா ஆகியோர் அடங்கிய நால்வர் குழுவை ஜனாதிபதி அக்கூட்டத்தில் நியமித்தமையும் தெரிந்தவையே.

இந்த விடயத்தை தொடர்ந்து முன்னெடுப்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியுடன் ஒரு விரிவான சந்திப்பை மேற்கொள்வதற்கு சம்பந்தன் – சுமந்திரன் தரப்பு விரும்புவதாக அறியவந்தது.

நேற்று வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணிக் கூட்டத்துக்குப் பங்குபற்ற வந்திருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அக்கூட்டம் முடிந்ததும் சம்பந்தன் – சுமந்திரன் இவ்விடயத்துக்கான சந்திப்புக்கு நேரம் ஒதுக்கித் தருமாறு வேண்டினர்.

வெள்ளியன்று ‘பட்ஜட்’ விவகாரம் முடிவடைந்ததும் இந்தச் சந்திப்புக்குத் தாம் நேரம் ஒதுக்கித் தருவார் என ஜனாதிபதி மைத்திரிபால சம்பந்தனிடம் நேற்றைய சந்திப்பின்போது உறுதியளித்தார் எனத் தெரிகின்றது.

இந்தச் சந்திப்புப் பெரும்பாலும் அடுத்த வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *