பயிற்சியில் ஈடுபட்ட வீரர் விபத்தில் சிக்கி மரணம்! – யாழ்ப்பாணத்தில் சோகம்

சைக்கிள் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த விளையாட்டு வீரர் ஒருவர் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பூநகரி, அருகம்வெளியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் யாழ்ப்பாணம், சுதுமலை, மானிப்பாய் தெற்கைச் சேர்ந்த பொ.பாலரஜீவ் (வயது – 38) என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் சைக்கிள் ஓட்டத்தில் தேசிய மட்டத்தில் பல வெற்றிகளைப் பெற்றவராவார்.

பாலரஜீவ் அதிகாலை வேளையில் நண்பர்களுடன் இணைந்து சைக்கிள் பயிற்சியில் ஈடுபடுவது வழமை. நேற்றும் வழமை போன்று அவரும், நண்பர்களும் அதிகாலை 4.45 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து பயிற்சிக்குப் புறப்பட்டுள்ளனர். எதிர்வரும் மே மாதத் நடைபெறவுள்ள தேசிய மட்டம் சைக்கிள் ஓட்டப் போட்டியை இலக்கு வைத்தே அவர்கள் பயிற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

பூநகரி, அறுகம்வெளியை அண்மித்து அவர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். ஒருவர் பின் ஒருவராக அவர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். நண்பர்கள் முன்னே சென்று கொண்டிருக்க 50 மீற்றர் தூரத்தில் கடைசியாக பாலரஜீவ் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

முன்னே சென்ற நண்பர்கள் சத்தம் ஒன்றைக் கேட்டுத் திரும்பிச் சென்றபோது பால்ராஜ் கிழே விழுந்திருந்தார். அவர் அவர்களிடம் தண்ணீர், தண்ணீர் என்று கேட்டுள்ளார். அவர் அசாதாரண நிலையில் காணப்பட்டதை அடுத்து அவர் அங்கிருந்து உடனடியாக சாவகச்சேரி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று கூறப்படுகின்றது.

அங்கிருந்து அவர் காலை 7 மணியளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். எனினும், அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார். பிரேத சோதனையின்போது, பாலரஜீவின் முதுக்குப்புறமாக வாகனம் ஒன்று ஏறிச் சென்றமைக்கான அடையாளங்கள் காணப்படுகின்றன என்றும், அதனால் என்பு முறிவுகள் ஏற்பட்டமையும் அவதானிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, தாம் சத்தம் கேட்டுத் திரும்பியபோது யாழ்ப்பாணம் நோக்கி இரு பட்டா ரக வாகனங்கள் வேகமானச் சென்று கொண்டிருந்தன என்று பால்ராஜூன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்துத் தொடர்பான விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *