ரூ. 1000! அமரவீர, திகாவுக்கிடையில் சபையில் சொற் சமர்!

பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை மையப்படுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணியால் விடுக்கப்பட்டிருந்த சவால் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரான மஹிந்த அமரவீர சபையில் இன்று கேள்வி எழுப்பினார்.

நாடாளுமன்றத்தில் தற்போது  நடைபெற்றுவரும் மலையக புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு தொடர்பான  குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மஹிந்த அமரவீர,

‘ தமக்கு அடிப்படை நாட்சம்பளமாக  ஆயிரம்  ரூபா வேண்டும்  என வலியுறுத்தி பெருந்தோட்டத்தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த தொகை வழங்கப்படாவிட்டால் அரசிலிருந்து வெளியேறுவோம் என முற்போக்கு கூட்டணி அறிவிப்பு விடுத்திருந்தது.

தற்போது அப்பிரச்சினை தீர்ந்துவிட்டதா? அரசிலிருந்து வெளியேறீவிட்டீர்களா” என அமைச்சர் திகாம்பரத்திடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த திகாம்பரம்,

” நாம் ஆயிரம் ரூபா கோரவில்லை.  நாளொன்றுக்கு 50 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினோம். அத்தொகையை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.” என்றார்.

” கொடுப்பனவு தொழிலாளர் கைக்கு கிடைத்துவிட்டதா” என எழுப்பட்ட  கேள்விக்கு,  இம்மாதத்திலிருந்து வழங்கப்படும் என அமைச்சர் திகா பதிலளித்தார்.

ஆயிரம் ரூபாவைகோரிதான் போராட்டம் நடத்தப்பட்டது என அமரவீர குறுப்பிடுகையில், குறுக்கீடுசெய்த திகாம்பரம்,

” உங்கள் நண்பர்தான் ஆயிரம் ரூபாவை கேட்டார். நான் அரசியல் இலாபம் தேடும் நபர் கிடையாது. ஆயிரம் ரூபா கோரிக்கை சாத்தியமற்றது. எனவேதான், நியாயமான சம்பள உயர்வு வேண்டும் என கோரினேன்.”  என்றார்.

இதன்பின்னர் பேசிய அமரவீர எம்.பி.,

” பெருந்தோட்டத்தொழிலாளர்களுக்கு அடிப்படைவசதிகள்கூட இல்லை. பாடசாலை இல்லை. போசாக்கு வசதி இல்லை.” என குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த திகாம்பரம்,

” நீங்கள் ஆட்சியில் இருந்தபோது இவற்றை பற்றி கதைக்கவில்லை. எதிரணிக்கு சென்ற பின்னர்தான் கதைக்கின்றீர்கள்.” என்று கூறினார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *