தமிழரசுக் கட்சியுடன் முட்டி மோதுகின்றது கொழும்புத் தமிழ்ச் சங்கம்! – ‘மன்னிப்பு’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் கொடுத்து காட்டமான அறிக்கை

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை விநயமாகவும் மன்றாட்டமாகவும் கேட்டுக்கொண்டதற்கு அமைவாகவும், எமது சங்கம் பண்பாட்டு நிறுவனம் என்ற அடிப்படையிலும் தந்தை செல்வா நினைவு நிகழ்வுக்கு மண்டபம் வழங்குவதை இரத்துச் செய்யும் கடிதத்தில் ‘மன்னிப்பு’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தினோம். ஆனால், அந்தக் கடித்தை தீய நோக்கிலும் அரசியல் இலாபத்துக்காகவும் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை நாளேடுகளுக்கும் செய்தி இணைத்தளங்களுக்கும் அனுப்பிப் பயன்படுத்தியதைக் கண்டிக்கின்றோம். இது விசமத்தனமான செயற்பாடாகும்.”

– இவ்வாறு கொழும்புத் தமிழ்ச் சங்கம் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சங்கத்தின் ஆட்சிக்குழுவில் உள்ள தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவரைப் பயன்படுத்தி சங்கத்தின் நிர்வாக நடவடிக்கைகளில் தலையிட்டு மண்டபம் பதிவு செய்யப்பட்டது என்றும், அதனை அறிந்த ஆட்சிக்குழு உறுப்பினர்கள் தலைவர், செயலாளர் ஆகியோரின் அனுமதியோடு மண்டபம் வழங்குவதை இரத்துச் செய்யும் கடிதம் உடனடியாக தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அந்தக் கடிதத்தை மாற்றியமைத்து ‘மன்னிப்பு’ என்ற வார்த்தையுடன் மீண்டும் கடிதத்தை அனுப்புமாறு தயவாகக் கேட்டுக் கொண்டதால் சங்கம் பண்பாட்டு நிறுவனம் என்ற அடிப்படையில் மதிப்புக் கொடுத்து கேட்டுக்கொண்டமைக்கு அமைவாக ‘மன்னிப்பு’ என்ற வாத்தையுடன் 30.03.2019 அன்று மீண்டுமொரு கடிதத்தை அனுப்பியதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வை இரத்துச் செய்யும் சங்கத்தின் தீர்மானம் தொடர்பில் முற்றிலும் தவறான தகவல்களைத் திரிபுபடுத்தி தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையினால் வெளியிடப்பட்ட குறித்த அறிக்கை சங்கத்தின் மாண்பையும் புகழையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதுடன் உண்மைக்குப் புறம்பான அறிக்கை தொடர்பாக சங்கம் தனது ஆழ்ந்த அதிருப்தியைப் பதிவு செய்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் கொழும்புத் தமிழ்ச் சங்கம், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளைத் தலைவருக்கும் இன்று கடிதம் ஒன்றையும் அனுப்பிவைத்துள்ளது.

அந்தக் கடிதத்தின் விபரம் வருமாறு:-

தலைவர்,
தமிழரசுக் கட்சி,
கொழும்புக் கிளை.
03.04.2019.

அன்புடையீர்,

மண்டப ஒழுங்கை இரத்துச் செய்தல்

2019-04-02ஆம் திகதி தந்தை செல்வாவின் நினைவுக் கூட்டத்தை நடத்துவதற்காக எமது சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தை 2019-03-28 ஆம் திகதி தங்களது கட்சி பதிவு செய்திருந்தது.

எமது சங்கம் குறித்த மண்டப பதிவை இரத்துச் செய்துள்ளமை தொடர்பான முடிவை தகுந்த காரணங்களுடனும் உரிய விளக்கங்களுடனும் விரிவாக 2019-03-29 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம் தங்களுக்கு அறிவித்திருந்தது.

குறித்த கடிதத்திற்கு மறுமொழியாக 2019-03-30 அன்று திகதியிடப்பட்ட தங்களது கடிதம் எமக்கு தபால் மூலமாகவோ நேரடியாகவோ அனுப்பிவைக்கப்படாதிருந்தும் பொறுப்புள்ள சங்கம் என்ற வகையில் தங்களது குறித்த கடிதம் தொடர்பாக தங்களது கொழும்புக் கிளைச் செயலாளர் மூலம் தகவல் அறியக் கிடைத்ததும் 2019-03-31 ஆம் திகதி காலை பத்து மணிக்கு கொழும்புக் கிளைச் செயலாளருடன் தொடர்பு கொண்டு குறித்த கடிதத்தை தமிழ்ச் சங்கத்தின் மின் அஞ்சலுக்கு அனுப்புமாறு கோரியதன் பேரில் அவரால் குறித்த கடிதம் முற்பகல் 10.15க்கு எமது சங்கத்தினது மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டிருந்தது.

தங்களால் அனுப்பப்பட்ட குறித்த கடிதத்தில் தாங்கள் கோரியதற்கிணங்க 2019-03-31 ஆம் திகதி விசேட பொதுக் கூட்டம் ஒன்றைக் கூட்டுவதற்காக மாத்திரம் கூட்டப்பட்ட விசேட ஆட்சிக்குழுக் கூட்டத்தில் தங்களது குறித்த கடிதம் சமர்ப்பிக்கப்பட்டு ஆராயப்பட்டு பொருத்தமான பதில் ஒன்றை தங்களுக்கு அனுப்பி வைப்பதென ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.

மேலும் தங்களுடைய கட்சிக் குழுக் கூட்டத்தில் குறித்த எமது பதிலை சமர்ப்பித்து இவ்விடயத்தை முடிவுறுத்திக்கொள்ள விரும்புவதாக கூறி ‘மன்னிப்பு’ என்ற வார்த்தையை உள்ளடக்கி ஒரு கடிதத்தை அனுப்புமாறு தாங்களும் தங்கள் கட்சிச் செயலாளரும் விநயமாக மீண்டும் மீண்டும் வலியுறுத்தி மன்றாட்டமாகக் கேட்டுக்கொண்டதனால், எமது சங்கம் பண்பாட்டு நிறுவனம் என்ற அடிப்படையில் ‘மன்னிப்பு’ என்ற வார்த்தையை உள்ளடக்கி தங்களுக்கு 2019-04-01 ஆம் திகதியிட்டு ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தது.

இவ்வாறு சங்கத்தினால் அனுப்பப்பட்ட கடிதத்தை மிகவும் தவறாக நியாயமற்ற முறையில் ஒழுக்க விதிமுறைகளுக்கு மாறாகப் பயன்படுத்தி குறுகிய அரசியல் நோக்கங்கருதி தங்களால் விசமத்தனமாகவும் தீய நோக்கத்துடனும் காழ்ப்புணர்ச்சி கொண்டு வெளியிடப்பட்ட 2019-04-02 ஆம் திகதிய அறிக்கை ஒன்று இன்றைய (2019-04-03) நாளேடுகளிலும் செய்தி இணையத் தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பிரசுரமாகியிருந்தது.

எமது சங்கம் சட்டநெறிமுறைகளுக்கு அமைவாக எடுத்த, குறித்த நிகழ்வை இரத்துச் செய்யும் தீர்மானம் தொடர்பில் முற்றிலும் தவறான தகவல்களை திரிபுபடுத்தி தங்களால் வெளியிடப்பட்ட குறித்த அறிக்கை சங்கத்தின் மாண்பையும் புகழையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதுடன் குறித்த தங்களது உண்மைக்குப் புறம்பான அறிக்கை தொடர்பில் எமது சங்கம் தனது பலத்த கண்டனங்களையும் ஆழ்ந்த அதிருப்தியையும் பதிவு செய்கின்றது.

மேலும் கடந்த 76 ஆண்டுகளாக தமிழ்ப் பணி ஆற்றி வருகின்ற எமது சங்கத்தின் மேல் தமிழ் மக்கள் பெருமதிப்பும் அக்கறையும் கொண்டுள்ளமை யாவரும் அறிந்ததே. தங்களுடைய கட்சியினால் எமக்கு அனுப்பபட்டுள்ள 2019-3-30 ஆம் திகதிய கடிதத்திற்கும் 2019-04-02 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கைக்கும் வரிக்குவரி பதில் இறுப்பது என்பது தமிழ்ச் சூழலில் சில வங்குரோத்து கட்சிகள் செய்கின்ற அநாகரிகமான வார்த்தைப் பயன்பாடுகளையும் செயற்பாடுகளையும் அங்கீகரிப்பதாக அமைந்துவிடும் என்கின்ற அடிப்படை பண்பு நிலை நின்று இதை தவிர்க்க விரும்புகின்றோம்.

மேலும் 2019-03-24 ஆம் திகதி நடைபெற்ற தங்களது கொழும்புக் கிளைக் கூட்டத்தில் ‘அரசியல் கட்சியின் நிகழ்வு ஒன்றுக்கு தமிழ் சங்கம் மண்டப அனுமதி வழங்காது’ என்பதை சிலர் தெளிவாக எடுத்துக்கூறியிருந்தும் தங்ளுடைய கட்சியின் செயற்குழுவிலும் தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக் குழுவில் அங்கத்தவராகவும் இருக்கின்ற ஒருவர் ஊடாக தமிழ்;ச் சங்க நிர்வாக அலுவலரை மிகவும் தவாறக வழி நடத்தி தொழில் தர்மங்களுக்கு முரணான வகையில் குறித்த மண்டபத்தை தங்களது கட்சி பயன்படுத்திக்கொள்ள முயற்சித்திருந்தது.

இவ்வாறு சங்கத்தின் அலுவலர் ஒருவரை தங்களது கட்சி உறுப்பினர் ஒருவர் தவறாக வழிநடத்தி மண்டபத்தை பதிவு செய்திருந்தது தொடர்பாக எமது சங்கத்தின் தலைவர், செயலாளர் ஆட்சிக்குழு உறுப்பினர்களுக்கு அறியக் கிடைத்ததும் அது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து மண்டப அனுமதியை இரத்துச் செய்து தங்களுக்கு உரிய முறையில் அறியத்தரப்பட்டிருந்தது.

இதனடிப்படையில் சங்கத்தின் ஆட்சிக்குழு ஏகமனதாகவும் சட்ட ரீதியாகவும் எடுத்த இம் முடிவுக்கு எவ்வகையிலும் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையிடம் மன்னிப்புக் கோர வேண்டிய அவசியம் இல்லை.

தங்களது நினைவுக் கூட்டம் தொடர்பாக வெளிவந்திருந்த அறிவித்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், தமிழரசுக் கட்சியின் தலைவர், அதன் கொழும்புக் கிளைத் தலைவர், கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஆகியோர் மாத்திரமே உரையாற்றுவதாக செய்திகள் வெளியாகியிருந்தன. எனவே, இங்கு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த நிகழ்வும், அதில் உரையாற்றவிருந்த அரசியல்வாதிகளும் தனித்து ஒரு கட்சியை மாத்திரமே முன்னிலைப்படுத்தியவர்கள் என்பதனை எந்த ஒரு முட்டாளும் புரிந்துகொள்வான்.

எமது சங்கத்தின் மண்டப அனுமதியானது எந்தவொரு அரசியல் கட்சிக்கோ அல்லது அரசியல் கட்சி சார்ந்த நிகழ்வு ஒன்றுக்கோ வழங்கப்பட முடியாது என்கின்ற சங்க விதிகளுக்கு அமைவாகவே குறித்த நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டிருந்தது. இதனடிப்படையில் குறித்த நிகழ்வு பதிவு செய்யப்பட்ட முறையிலும் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்திலும் சங்கம் குறித்த நிகழ்வுக்கு அனுமதி வழங்கும் என்று எந்தவொரு அறிவிலியும் எண்ணியிருக்க முடியாது.

மேலும் எமது சங்கத்தில் 2019-03-31 ஆம் திகதி அன்று நடைபெற்ற விசேட ஆட்சிக்குழுக் கூட்டத்தில் தங்களது 2019-03-30 ஆம் திகதிய கடிதம் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடைபெற்றே மண்டப அனுமதியை இரத்துச் செய்யும் தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றியிருந்தோம்.

குறிப்பாக தங்களது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல் குறித்த தீர்மானம் தொடர்பில் எந்தவொரு தனிநபரினதோ அரசியல் கட்சியினதோ செல்வாக்கு இடம்பெற்றிருக்கவில்லை என உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

தங்களது இயலாமையின்பால் மிரட்டல் தொனியில் ‘தந்தை செல்வா நினைவுக்கு மறுப்புத் தெரிவித்தமைக்கு பொறுப்பானவர்கள் நிச்சயம் வரும் ஆண்டுப்பொதுக் கூட்டத்தில் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்’ என எச்சரித்திருப்பதை எமது சங்கத்தை நேசிக்கும் தமிழ் மக்களிடமே விட்டு விடுகின்றோம்.

எமது சங்கம், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டது என்பதை சொல்லிலும் செயலிலுமாக காட்டி அதற்காக எவ்வித தியாகங்களை செய்யவும் நாம் தயாராகவே இருக்கிறோம்.

‘சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை வெல்லும்சொல் இன்மை அறிந்து’

என்ற வள்ளுவன் வாக்கிற்கு இணங்க எமது சங்கம் வார்த்தைகளின் பெறுமதி அறிந்து வள்ளுவன் வழிநின்று இவ்விடயத்தை இத்துடன் நிறைவு செய்கிறது. இறுதியாகவும் வள்ளுவனின் குறளே எமக்குத் துணை நிற்கின்றது.

‘யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு’.

இப்படிக்கு

க.க.உதயகுமார்,
பொதுச் செயலாளர்,
கொழும்புத் தமிழ்ச் சங்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *