ஜனாதிபதித் தேர்தலில் ரணில், சந்திரிக்கா ஓரணியில்! மைத்திரி, மகிந்த பனிப்போர்

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் சமர்ப்பித்த நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்து தோல்வியடைச் செய்ய வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கூறியுள்ளது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிபதி மகிந்த ராஜபக்சவை மையப்படுத்திய ஸ்ரீலங்கா பொது ஜனபெரமுன கட்சி, வரவு செலவுத் திட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் எதிராக வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தலைவராகக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலர்
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பதில்லையென முடிவு செய்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இவ்வாறு கூறியுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவும் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவு வழங்கி வரும் நிலையில், ஏனைய உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவின் ஆலோசனையின் படி ரணில் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.

இந்த நிலையில் கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் முன்னாள் அமைச்சர் பேராசியர் ஜி.எல். பீரிஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சரியான நிலைப்பாட்டை வெளியிட வேண்டுமெனக் கேட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் மாபெரும் அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டமிட்டுள்ளது. ஆனால் நடப்பு நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்த பின்னரே அரசியல் கூட்டணி பற்றி பேசமுடியும் என பேராசிரியர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஐந்தாம் திகதி வெள்ளிக்கிழமை மாலை இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிப்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுதியான முடிவு எடுக்க வேண்டும். இல்லையேல் அரசியல் கூட்டணி தொடர்பாக பேசுவதில் அர்த்தம் இல்லையென பீரிஸ் எச்சரிக்கை வேறு விடுத்துள்ளார்.

அதேவேளை, நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டுமெனவும் இல்லையேல் அரசியல் கூட்டணி அமைக்க முடியாதெனவும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு சவால் விடுத்துள்ளது.

ஆனால் இலங்கையின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளர் என்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுதியாக இருப்பதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

எனினும் ஜனாதிபதி வேட்பாளராக மகிந்த ராஜபக்ச தன்னையே அறிவிப்பாரென மைத்திரிபால சிறிசேன நமப்புவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேறு சில உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

ஆனாலும் சந்திரிக்கா மீது நம்பிக்கை வைத்துச் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏனைய சில மூத்த உறுப்பினர்கள், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க மாட்டார்கள் என்றும்,

ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருக்கே ஆதரவு வழங்குவார்கள் எனவும் கட்சியின் உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்த விடயத்தில் மைத்திரிபால சிறிசேன தடுமாற்றமடைந்திருப்பதாகவும் ஜனாதிபதி வேட்பாளராகத் தனது பெயரை மகிந்த ராஜபக்ச அறிவிக்காமல் விட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராகத் தனித்துப் போட்டியிடத் தீர்மானித்துள்ளாரெனவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் சந்திரிக்கா அதற்கு உடன்படவில்லை.

மைத்திரிபால சிறிசேன, தற்போது ரணில், மகிந்த, சந்திரிக்கா ஆகியோருடைய பார்வையில் செல்லாக்காசு என்ற நிலையை அடைந்துவிட்டாரெனக் கட்சியின் மூத்த உறுப்பினரொருவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளரரையே ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிப்பதென சந்திரிக்கா முடிவு செய்துள்ளார். இதனால் மைத்திரி சந்திரிகா ஆகியோரிடையே பனிப்போர் இடம்பெற்று வருவதாக மற்றுமொரு தகவல் கூறுகின்றது.

அதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் மைத்திரி – மகிந்த ஆகியோரிடையேயும் பனிப்போர் இடம்பெறுகின்றது.

எனவே இந்த இரண்டு பனிப்போர்களிலும் மைத்திரிபால சிசேனவினால் வெல்ல முடியுமா அல்லது ஒரு பனிப்போரிலாவது வெற்றிபெறுவாரா என்பது குறித்து கருத்துக் கூற முடியாதென கட்சியின் சில உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

மைத்திரியின் அரசியல் நகர்வுகள் எதுவுமே சாத்தியப்படக் கூடியதல்ல என்று கட்சியின் வேறு சில உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர். மைத்திரிபால சிறிசேன, தற்போது ரணில், மகிந்த, சந்திரிக்கா ஆகியோருடைய பார்வையில் செல்லாக்காசு என்ற நிலையை அடைந்துவிட்டாரெனக் கட்சியின் மூத்த உறுப்பினரொருவர் கூறினார்.

கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக்கி அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியவர் மைத்திரிபால சிறிசேனவே என்ற குற்றச்சாட்டு அனைத்துத் தரப்பினரிடமும் வேரூன்றியுள்ளமையே அதற்குக் காரணமென அவதானிகள் கூறுகின்றனர்.

அதேவேளை, இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் ஈழத் தமிழர்களுக்குரியதல்ல. அது சிங்களத் தேசியத்துக்கான தேர்தலென தமிழ்த் தரப்பு காலம் காலமாகக் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சிரேஷ்ட ஊடகவியலாளர்.  அ.நிக்ஸன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *