கோடிகளால் கூட்டமைப்பை வளைத்துவிட்டாராம் ரணில்! – சீறுகின்றது மஹிந்த அணி; ‘பட்ஜட்’டைத் தோற்கடிப்போம் எனவும் சூளுரை

“வரவு – செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி என்ற பெயரில் பல கோடி ரூபாவைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சலுகையாகக் கொடுத்து அவர்களைத் தம் பக்கம் வளைத்து விட்டார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. ஆனாலும், எதிர்வரும் 5ஆம் திகதி வரவு – செலவுத் திட்டத்தை நாம் தோற்கடித்தே தீருவோம்.”

– இவ்வாறு மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோர் தமிழ் ஊடகம் ஒன்றிடம் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறியுள்ளதாவது:-

“இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று இரகசியப் பேச்சு நடத்தியுள்ளார்.

அதில் இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்புக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கூட்டமைப்பினரிடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுள்ளார்.

ஆனால், வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு என்ற பெயரில் பிரதமரிடம் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல கோடி ரூபாவைச் சலுகையாகக் கோரியுள்ளனர் என்றும், அதற்குப் பிரதமரும் இணங்கியுள்ளார் என்றும் அறிகின்றோம்.

நாட்டு மக்களின் நிதி கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுகபோக வாழ்க்கைக்குச் செலவாகப் போகின்றது. தமிழ் மக்களின் தன்மானத்தைக் காற்றில் பறக்கவிட்டு சலுகை அரசியலில் சரணாகதி அடைந்துள்ளனர் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 14 பேர் ரணில் அரசிடமிருந்து பல கோடி ரூபாவை சலுகையாகப் பெறவுள்ளனர்.

ஆனாலும், வரவு – செலவுத் திட்டத்தை நாம் தோற்கடித்தே தீருவோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர், ஜே.வி.பியினர், ஐக்கிய தேசிய முன்னணி அரசின் அதிருப்தியாளர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு அதிருப்தியாளர்கள் வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்காளிக்கவுள்ளனர்” – என்று குறிப்பிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *