போதைப்பொருள் குற்றவாளிகளை தூக்கிலிடும் திகதி முடிவாகிவிட்டது! – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

“பெரும் உயிர் அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது நான் போதைப்பொருளுக்கு எதிரான போராட்டக் களத்தில் இறங்கியமை எதிர்காலச் சந்ததியினருக்காக நல்லதொரு தேசத்தை கட்டியெழுப்புவதற்காகவே. அந்தப் போராட்டத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வருவேன்.”

– இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

சட்டவிரோத போதைப்பொருளுக்கு எதிரான சட்டதிட்டங்களை தற்போது வலுவூட்டியுள்ளமையுடன், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குத் தூக்குத் தண்டனை வழங்கும் திகதி மற்றும் அட்டவணையைத் தான் தீர்மானித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதிவண. மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகையின் வழிகாட்டலின் கீழ் அனைத்து மதத் தலைவர்களினதும் பங்குபற்றலில் நேற்றுப் பிற்பகல் மோதரை, விட்ஸ்வைக் பூங்காவில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவிக்கும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலம் முதலே நான் போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தேன். ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் அந்தப் போராட்டத்தை மேலும் தீவிரப்டுத்தினேன்.

நாட்டுக்காக முன்னெடுக்கப்பட்ட அந்த வேலைத்திட்டத்துடன் நாட்டின் சகல மக்களும் அனைத்து தரப்பினர்களும் கைகோர்த்துள்ளனர்.

போதையிலிருந்து விடுதலை பெற்ற நாடு எனும் தொனிப்பொருள் வெகுவிரைவிலேயே யதார்த்தமாகும்” – என்றார்.

போதையிலிருந்து விடுதலை பெற்ற நாட்டுக்காக நேற்று முற்பகல் நடைபெற்ற சிறப்புப் பிரார்த்தனையைத் தொடர்ந்து மேல் மாகாண கத்தோலிக்க திருச்சபையிலிருந்து எதிர்ப்புப் பதாதைகளை ஏந்தி அமைதி ஊர்வலம் ஒன்று நடைபெற்றது. அதன்பின்னர் நேற்றுப் பிற்பகல் கொச்சிக்கடை புனித அந்தோனியார், கிராண்ட்பாஸ் புனித ஜோசப், வத்தளை புனித மரியா ஆகிய ஆலயங்களில் இருந்து வருகை தந்த எதிர்ப்பு ஊர்வலங்கள் மோதரை விட்ஸ்வைக் பூங்காவில் ஒன்றுதிரண்டதுடன், அங்கு சிறப்புத் தெளிவூட்டல் நிகழ்ச்சியொன்றும் நடைபெற்றது.

அதிவண. மல்கம் கார்டினல் ரஞ்சித் ஆண்டகையால் சிறப்பு உரை நிகழ்த்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *